இந்திய திரை உலக வரலாற்றில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் பல பேர்களில் இன்றும் வண்ண மயமாய் மிளிர்ந்து கொண்டிருப்பது இரண்டு பெயர்கள்,ஒன்று இசைஞானி இளையராஜா ; இன்னொன்று இயக்குனர் மணிரத்னம் .
இந்த இரண்டு ஜாம்பவான்களின் சினிமா கூட்டணி 1983 இல் ஆரம்பித்தது .
இருவரும் தமிழர்கள் என்றாலும் இவர்களை இணைத்தது ஒரு கன்னட படம்.
1983இல் மணிரத்னம் முதல் முதலாக இயக்கிய “பல்லவி அணுபல்லவி” என்ற கன்னடப் படத்திற்கு இளையராஜா தான் இசை. படமும், இசையும் மாபெரும் வெற்றி , அடுத்த ஆண்டே இவர்கள் இணைந்து கோலோச்சியது , அரபிக்கடல் முட்டி மோதி தழுவி கிடக்கும் மலையாள திரை உலகில் “உணரு” படம் மூலம் .
இப்படி இரண்டு படங்களிலும் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியதில் இருவருக்கும் இடையே ஒரு புரிதலும் இணக்கமும் இயல்பாக வந்தது. அந்த நட்புக்கு அடையாளமாக வெளிவந்தது தான் 1986இல் வந்த “மௌனராகம்” படம்,சூப்பர் டூப்பர் ஹிட் . சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 35 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நம் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது “மௌனராகம்” படமும் இசைஞானியின் பாடல்களும்.
மீண்டும் 87இல் இளையராஜாவும் மணிரத்தினமும் இனைந்து மிரட்டிய படம் “நாயகன்” .
இயக்கமும் இசையும் ஒரு புதிய சரித்திரத்தை ஏற்படுத்தியது . 60வது ஆஸ்கார் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கபட்டது . படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் நாயகனுக்கு மேலும் மகுடம் சூட்டின.
வருடத்திற்கு ஒரு படம் வீதம் மணிரத்தினமும்,இளையராஜாவும் இணைந்த பட வரிசையில் 1988இல் வந்த படம் “அக்னி நட்சத்திரம்”. இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அமோகமாக வந்ததால் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கேமரா frame இல் புதிய தொழில் நுட்பத்தில் பாடல்களை படம் பிடித்தார். அந்த அளவுக்கு இயக்கமும் இசையும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தது.
இந்த நேரத்தில் இளையராஜாவும் மணிரத்னமும் இணைந்தது தெலுங்கில் “கீதாஞ்சலி” என்ற படத்திற்காக. அது தமிழிலில் “இதயத்தை திருடாதே” என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. காலம் கடந்தும் அந்த படத்தின் பாடல்கள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அடுத்து 1990இல் இவர்கள் கூட்டணியில் உருவான திரை படம் “அஞ்சலி” . இந்த படமும் 63வது ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது
1991இல் ரஜினி, மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த “தளபதி” படம் மாபெரும் வெற்றி பெற்றது .
தளபதி படத்தின் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் தேசிய அளவில் சிறந்த விருதுகள் வழங்கப்பட்டது .
மகாபாரதத்தின் கர்ணன்-துரியோதனனின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தளபதி படமே இளையராஜா மணிரத்தினத்தின் கூட்டணியில் வெளிவந்த கடைசி படம்.
நட்பை அடிப்படையாக வைத்து எடுத்த தளபதி படத்தோடு இளையராஜா,மணிரத்னம் திரை கூட்டணி முடிவுக்கு வந்தது. வரலாற்றின் முரண்பாடு என்றே சொல்லலாம் . எட்டு ஆண்டுகளில் எட்டு படங்கள், அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் . இப்படி திரையுலகில் அழிக்கமுடியாத பெயர்களாக, நபர்களாக விளங்கும் இளையராஜா, மணிரத்னம் இருவரின் பிறந்த தினமும் ஒரே நாள் (ஜூன் 2).
இவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by K.S.Nathan