Specials Stories Trending

உலகநாயகனின் 61 ஆண்டுகள் !!!!

நடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதை ஆரவாரத்துடன் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 1960 முதல் 2020 வரை காலத்தால் என்றும் அழிக்க முடியாத திரைக் கலைஞராக கமல்ஹாசன் இருந்து வருகிறார்.

1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் செல்வம் எனும் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் தொடர்ந்து நடித்து வந்தார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம் தான் கமல்ஹாசனுக்கு முதன்முதலில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்த திரைப்படம்.

தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளில் நடித்து வந்த கமல்ஹாசன் 1975 ஆம் ஆண்டு கன்னியாகுமரி  திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்காமல் வித்தியாசமான கதைக் கரு உடைய கதாபாத்திரங்களை விரும்பி தேர்ந்தெடுத்து நடித்தார் கமல்.

1982 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த மூன்றாம்பிறை திரைப்படத்திற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை பெற்றார். அதன்பின் நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல்ஹாசன் பெற்றார். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்திற்காக சிறந்த தயாரிப்பாளரான தேசிய விருதை கமல்ஹாசன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கலைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலைமாமணி விருதை 1980 ஆம் ஆண்டு கமல்ஹாசன் பெற்றார். அதுமட்டுமின்றி 1999 ஆம் ஆண்டு தமிழக அரசின் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் விருதையும் கமல் பெற்றார். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் கமலுக்கு வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசின் செவிலியர் விருதையும் 2016ஆம் ஆண்டு கமல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர், நடன இயக்குனர், என பல்வேறு பரிமாணங்களில் தமிழ் சினிமாவிற்கு இவர் ஆற்றிய கலைப்பணி ஒருபோதும் ரசிகர்களால் மறக்கப்படாது  என்பதே மறுக்க முடியாத உண்மை.

கமல்ஹாசன் அவர்களின் 61 ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் இணையத்தில் #61TrailBlazingYrsOfKamal என்ற டேகை ட்ரெண்ட்  செய்து வருகின்றனர். கமல்ஹாசன் அவர்களின் இந்த வெற்றிப் பயணம் மேலும் தொடர வேண்டுமென சூரியன் FM சார்பில் வேண்டி வாழ்த்துகிறோம்.

About the author

shafin

உங்களில் ஒருவன்