Cinema News Specials Stories

இனி தமிழர்களின் வரலாற்றை உலகம் அறிந்து கொள்ளும்!

தமிழ் இலக்கியத்தின் மாபெரும் சொத்தாக கருதப்படும் பொன்னியின் செல்வன் நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு, போராட்டங்களுக்கு பின் இந்த வருடம் திரைப்படமாக உருவானது. அதன் முதல் பாகம் தற்போது வெளியாகி உலக மக்கள் அனைவரும் தமிழர்களின் பெருமையை தெரிந்து கொள்ள வழிவகுத்துள்ளது.

எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல் என பலரும் நடிக்க ஆசைப்பட்ட தமிழர் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாகிய சரத்குமார், பார்த்திபன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோரது நடிப்பில் படமாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குநர் மணி ரத்னம்.

தமிழ் சினிமாவின் தரத்தை இந்திய அளவில் எப்போதும் கொண்டு செல்லும் இயக்குநர் மணி ரத்னம், பொன்னியின் செல்வன் படத்திலும் அதனை செய்து காட்டியுள்ளார். பொன்னியின் செல்வன் புத்தகம் 5 பாகங்களாக இருந்தாலும் படம் மொத்தம் 2 பாகங்களாக மட்டுமே உருவாகியுள்ளது. நாவலின் முக்கிய சம்பவங்களை ஒருங்கிணைத்து இரண்டே முக்கால் மணி நேரத்தில் முதல் பாகத்தை நமக்கு காட்சிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ராஜராஜ சோழன், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்கள் அந்த காலத்தில் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும், 90’ஸ் கிட்ஸ்கள் விவரம் தெரிந்து பார்க்கும் முதல் தமிழர் வரலாற்று திரைப்படம் இதுதான். தமிழர் மரபில் பல்வேறு வம்சங்கள், மன்னர்கள் வந்து சென்றாலும் சோழர்கள் காலம், அதிலும் குறிப்பாக இராஜ ராஜ சோழனின் காலம் தமிழர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது. அந்த சமயத்தில் நடக்கும் கதைக்களம் தான் பொன்னியின் செல்வன் நாவல்.

வரலாற்றில் தனது கற்பனையையும் கலந்து ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கியிருப்பார் எழுத்தாளர் கல்கி. அதற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் விதமாக படத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம். மேலும் படத்திற்கு கூடுதல் பக்க பலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அமைந்துள்ளது.

ஆதித்த கரிகாலனின் பின்னணி இசையில் தொடங்கி பொன்னி நதி பாக்கனுமே என படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தனித்துவமான இசை ஒலிக்கிறது. மேலும் மன்னர் காலத்தை அந்த காலத்து அரண்மனை முதல் கப்பல் வரை நம் கண்முன் காட்சிப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியுள்ளார் படத்தின் கலை இயக்குநர் தோட்டா தரணி.

இதனை தாண்டி நடிகர்கள் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கொரோனா சூழலில் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாக படமாக்கியிருப்பது என்பது அசாத்தியமான ஒரு விஷயம் தான்.

படத்தில் உணர்ச்சிப்பூர்வமான, பார்வையாளர்களை இருக்கைகளின் நுணிக்கு கொண்டு வரக்கூடிய காட்சிகள் இல்லை, போர் முறை சரியாக காண்பிக்கப் படவில்லை என்று நாவலை படித்தவர்கள் சில எதிர்மறை விமர்சனங்களை வைத்தாலும் தமிழர்களின் வரலாற்றை கொண்டாடியே தீருவோம் என உலகெங்கும் தமிழ் மக்கள் பொன்னியின் செல்வனை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்று வருகின்றனர்.

இவ்வளவு வரவேற்பு கிடைப்பதை பார்த்து பிற மொழியினரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து, தமிழர் வரலாற்றை அறிந்து வியந்து வருகின்றனர். மேலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடத் தவறிய நாம் இந்த படத்தையும் கொண்டாடாமல் விட்டுவிடக் கூடாது என்று படத்தை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

படம் வெளியாகி 2,3 நாட்களே ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இப்போதே இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது. நாவல் படிக்காத, கதை தெரியாத 2K கிட்ஸும் ரசிக்கும்படியாக பொன்னியின் செல்வன் உருவாகியிருப்பதே படத்திற்கான பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

இது ஒரு புறமிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய வேள் பாரி நாவல் தற்போது படமாகி வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பானது, இனி தமிழர்களின் பெருமை கூறும் வரலாறுகள் பல படங்களாவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

Article By MaNo

About the author

MaNo