Specials Stories

S.J.Suryah எனும் All Rounder !!!

“பொதுவாக இயக்குனர்கள், நடிக்க வைப்பதில் தான் வல்லுநர்கள் நடிப்பதில் அல்ல”, என்ற கூற்றை மாற்றி எழுதியவர் எஸ்.ஜே.சூர்யா. இன்று இயக்குனரும், ஆகச்சிறந்த நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சினிமாவில் எப்படியாவது நடிகன் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு படிக்க வந்த எஸ்.ஜே.சூர்யா தன்னம்பிக்கையுடன் தன் கனவை நோக்கி பயணத்தைத் தொடங்கினார். தனது ஆரம்ப காலங்களில் சென்னையில் உள்ள பல ஹோட்டல்களில் பணிபுரிந்த இவர் தனது விடா முயற்சியால் சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

SJ Suryah: SJ Suryah is 'Monster mama' now! | Tamil Movie News - Times of  India

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், ‘ஆசை’, ‘சுந்தர புருஷன்’ ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் கதை சொல்லும் திறனை கண்டு வியந்த தல அஜித் அவர்கள் ‘வாலி’ திரைப்படத்திற்கு சரியென தலையசைக்க, இயக்குனராக அவதாரம் எடுத்தார் எஸ்.ஜே.சூர்யா.

இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த ‘குஷி’ படத்தை இயக்கும் வாய்ப்பை எஸ்.ஜே.சூர்யாவிற்கு அளித்தார். தல தளபதியை வைத்து தொடர்ந்து இரு வெற்றி படங்களை கொடுத்த எஸ்.ஜே சூர்யாவிற்குள் இருந்த, நடிகன் ஆக வேண்டும் என்ற ஆசை இன்னும் அடங்கவில்லை.

குஷி திரைப்படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்து விட்டு, ‘நியூ’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை இவரே இயக்கி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ ஆகிய இரு படங்களிலும் இவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படதில் இவர் நடித்த ராம்சே கதாபாத்திரம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரமாக அமைந்தது.

தனது வித்தியாசமான இயக்கத்தாலும், தனித்துவமான நடிப்பினாலும் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த எஸ்.ஜே.சூர்யா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

alex lew