Cinema News Specials Stories

“வாத்தியாரே நம்ம ஜெயிச்சுட்டோம்”

தமிழ் சினிமாவுக்கான அத்தனை இலக்கணங்களிலிருந்தும் விலகி, ஒரு மிக சிறந்த பீரியட் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக நகரும் படம் “சார்பட்டா பரம்பரை.” தோற்றுவிட்டால் சார்பட்டா பரம்பரை இனி சண்டையே போடாது என்று போட்டிக்கு ஒப்புக்கொண்டு வருகிறார் வாத்தியார் பசுபதி. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘சார்பட்டா பரம்பரை’.

இங்கிலீஸ் குத்து சண்டையின் வரலாறு, அந்த விளையாட்டின் நுணுக்கங்கள், ஒவ்வொரு சிறந்த விளையாட்டு வீரர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் அவரவர் தனித்திறன் என இன்றைய தலைமுறை அதிகம் அறிந்திராத பழைய மெட்ராஸின் பாக்ஸிங் விளையாட்டு நுணுக்கங்களை நமக்கு புகட்டிய படம் இது.

படத்தின் ஆக்கத்திற்கு கேமராவும், கலை இயக்கமும் பெரும் துணை புரிந்திருக்கின்றன! சண்டைக்காட்சிகளின் சப்தங்களுக்கும் அம்சமாய் வாசித்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாக்ஸிங் ரிங்குக்குள் நடைபெறும் காட்சிகளிலும், பயிற்சி காட்சிகளும் டான்ஸிங் ரோஸாக நடித்திருக்கும் ஷபீரும், கதாநாயகன் கபிலனாக ஆர்யாவும் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் துணை பாத்திரங்கள் நாயகனை மிஞ்சும் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் சார்பட்டாவின் டான்ஸிங் ரோஸ் என்றைக்கும் முதன்மை. ஆர்யாவுடன் போட்டிக்கு ஒத்துக்கொள்வதில் தொடங்கி, ரிங்கினுள் நளினமான உடல்மொழியுடன் சண்டையிடத்தொடங்கி, ஆர்யாவின் குத்துகளினால் அதிர்ந்து களைத்தபோதும் கூட நடன பாணி உடலசைவை நிறுத்தாமல் சண்டையிட்டு தள்ளாடிச் சாயும் வரை ஷபீரை தவிர கதாநாயகன் ஆர்யா உட்பட பிரேமிலிருக்கும் யாரும் கண்களுக்கு தெரிந்திருக்க மாட்டார்கள்.

அலட்சியமான உடல் மொழியுடன் பட்லர் இங்கிலீஸ் பேசி நடித்து கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கும் அந்த பாத்திரமாகவே நடித்திருப்பார் ஜான் விஜய். ரங்கன் வாத்தியாராக பசுபதியின் முகத்தில் ஒரு தலைமுறையின் அத்தனை வெற்றி வீழ்ச்சிகளையும் கண்டுவிட்ட நிதானம்! பயிற்சி காட்சிகளில் அவரது கை அசைவுகளில் ஒரு சிறந்த தொழில்முறை பாக்ஸிங் பயிற்சியாளரின் அசைவுகளை கண்முன்னால் நிறுத்தி இருப்பார்.

பட்டாம்பூச்சி மாதிரி ரிங்குல உடம்ப லேசா வச்சிக்கனும். ஆனா தேனீ மாதிரி ஆட்டத்துல கொட்டனும். இதுபோன்ற வசனங்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தி இருப்பது மேலும் அழகு. கபிலனுக்கும் வேம்புலிக்கும் வரும் குத்துச்சண்டை காட்சிகளில், நாமே இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு ’கபிலா அப்படிதான்… அடி… குத்து…’ என்று கத்தும் அளவுக்கு படத்தோடு நாம் ஒன்றிப்போய் ரசித்திருப்போம்.

’இது நம்ம ஆட்டம்… வாய்ப்பு இங்க நமக்கு அவ்வளவு சீக்கரமா கிடைக்குறது இல்லை. நீ அடிச்சு ஆடு கபிலா’ போன்ற வசனங்கள் நம்மை பூரிப்படைய செய்யும். நம் அனைவருக்குள்ளும் அப்படி ஒரு கபிலன் ஒளிந்திருக்கிறான். பரம்பரை போட்டி, சாதிய வேறுபாடு என பல பிரச்சனைகளை பேசுவதாக தோன்றினாலும் சாதி மத பேதமெல்லாம் தாண்டி ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த கடைநிலை மனிதர்களின் எழுச்சியை காட்டும் படம் என வாதிடுவதற்கான சாத்தியங்கள் சார்பட்டா பரம்பரையில் அதிகம்.

திரை அரங்கில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் படத்தின் அத்துணை கதாபாத்திரங்களும் உயிர் வாழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Article By Rj Vigi