Specials Stories

மதுரை வீரன் பத்தி உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டின் முக்கிய காவல் தெய்வங்களில் தனித்த சன்னதியுடன், முறுக்கிய மீசை, கையில் வாள் என வெள்ளையம்மாள், பொம்மி ஆகிய இரு பெண் தெய்வங்களுடன் காட்சியளிக்கிறார் மதுரைவீரன். இப்படிப்பட்ட மாவீரன் காவல் தெய்வமான கதையை பார்ப்போம்.

ஆண்டு தோறும் ஆவணி – 17 ஆம் நாள் தமிழர் மத்தியில் பல கிராமங்களில் மதுரைவீரனுக்கு திருவிழா கொண்டாடி வருகின்றனர். மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாகவும் கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றது.

திருச்சி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள். ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் காவல் செய்ய வேண்டும். அன்று காவல் பொறுப்பை தந்தையின் உடல்நல குறைவால் அந்த ஊரின் மாவீரன் மதுரைவீரன் ஏற்றார்.

பொம்மி மதுரைவீரனின் வீரத்திலும் அழகிலும் மயங்க இருவரும் காதல் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோபத்தில் இருந்தார். அவருடைய மகன் பெரும்படையுடன் மதுரைவீரனை எதிர்க்கிறார். மதுரைவீரன் அவரது படையுடன் கடுமையாக போரிட்டு வெற்றி கொள்கிறார்.

இப்படியொரு விஷயம் நடந்த பிறகு கள்வர்களால் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ராஜ்ஜியங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின. அவர்களை அடக்கமுடியாமல் ராஜ்ஜியங்கள் மிரண்டு இருந்தன. அந்த நேரத்தில் மதுரைவீரனின் வீரத்தை அறிந்து திருமலை நாயக்கர் கள்வர்களின் அட்டூழியங்களை அடக்க மதுரைவீரனை பயன்படுத்திக்கொண்டார், மதுரைவீரனின் படை மதுரையின் சுற்றுவட்டார பகுதியில் இருந்த கள்வர்கள் கொட்டத்தை ஒடுக்கி மதுரை மக்களை காத்தார் மதுரைவீரன்.

இந்நிலையில் திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் கள்வர்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவரின் வீரத்தை அறிந்த புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் கேட்டு கொண்டதற்கிணங்க திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படையுடன் சென்று போரிட்டு மக்களுக்கு பெரும்துன்பத்தை கொடுத்துக்கொண்டிருந்த கள்வர்கள் கூட்டத்தை ஒடுக்கி மக்களை பாதுகாத்தார் மதுரைவீரன்.

அதனாலேயே தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து இனத்தவரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் மதுரைவீரனை சூழ்ச்சியின் மூலமாக தான் கொல்லவேண்டும் என்று முடிவெடுத்து, மதுரைவீரனை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் பிடித்து கொலை செய்து விடுகின்றனர்.

நடந்த அநியாயத்தை பார்த்து மீனாட்சியம்மன் நேரடியாக தரிசனம் வழங்கி மதுரையை அழிக்க முற்பட்டாள். மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு மனமிறங்கி அவரை ஆட்கொண்டு கிழக்கு கோபுரவாசலில் கம்பத்தடி வீரனாக வைத்துக்கொண்டார். முதல் பூஜை அவருக்கு நடந்த பின்புதான் மீனாட்சிக்கே பூஜை நடக்கும்.

மதுரைவீரன் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டதை அறிந்த அவரது படை மதுரையை துவம்சம் செய்தது. அவர்களிடமும் மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அவர்கள் போரை கைவிட்டனர் என்பது வரலாறு. கள்வர்களிடம் இருந்து மக்களை பாதுகாத்ததனால் தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து இனத்தவரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.