Specials Stories

பற்றி எரியும் ஆஸ்திரேலியா !!!

Bush Fire

கங்காருகளின் சாம்ராஜ்யம் இன்று கருகி போனது.

அபூர்வ விலங்கான அரிய கோலா கரடிகள் இன்று கரி கட்டைகளாய்..

ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒரு நாள் போட்டியை உலகம் முழுதும் இருந்து பார்த்த நம்மால் கடந்த 120 நாட்களாய் கொழுந்து விட்டு எரிந்து வரும் புஷ் தீயை பற்றி அறிந்து கொள்ளவில்லை.

இந்த புஷ் தீயை குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர் இதன் தீவிரம் எந்த அளவு என்பதை அறிந்து கொள்ளலாம்.

அமேசான் காட்டு தீயும் – ஆஸ்திரேலிய காட்டு தீயும்

கடந்த ஆண்டில் ஒட்டு மொத்த உலகை சோகத்தில் ஆழ்த்தியது அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீவிபத்து. இயற்கை வளத்தின் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்த தீவிபத்து என்ற மோசமான வரலாறு கொண்ட அமேசான் காட்டு தீ இறையாக்கியது 9 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பை.

இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் புஷ் பஃயர் எரித்து சாம்பலாக்கி ஆக்ரமித்து கொண்டது 50 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பை.

Amazon - Bush Fire

ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் இந்த ஒப்பீடு இயற்கையின் கோரத்தாண்டவத்தை நமக்கு உணர்த்தினாலும் நமது அறியாமையும் உணர்த்துகிறது.

தீப்பொறியான காட்டு தீ

செப்டம்பர் 5ம் தேதி நியூ சவுத் வேல்ஸ் – ல் ஆரம்பித்த இந்த புஷ் பஃயர் மெல்ல மெல்ல பரவி சிட்னி-ல் தனது புகை மூட்டத்தை பரப்பிய போது தான் இந்த தீயின் தீவிரத்தை உலகம் அறிந்தது.

இந்த காட்டு தீயானது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி, குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா கடற்கரைகளிலும் தனது அழிவை பரப்பி கொண்டிருக்கின்றது.

வருடாவருடம் உயர்ந்து வரும் உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகும் நிலை மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வறட்சி அதிகரித்தும் வருகின்றது. இந்த வறட்சி உணவிலோ செல்வதிலோ ஏற்பட்டதல்ல, வானிலை வறட்சி என்ற இயற்கை வறட்சி. கடந்த வருட வானிலை வறட்சியால் ஆரம்பித்த காட்டு தீ கிட்ட தட்ட 45 டிகிரி வெப்பத்தின் காரணமாக தனது வலிமையை மேலும் அதிகரித்தது.

Satellite View - Bush Fire
Satellite View – Bush Fire

தீ, தன்னோடு சேரும் அனைத்தையும் அழித்து விடும் வல்லமை படைத்தது. அந்த வல்லமை இன்று அழித்துள்ளது 50 லட்சம் ஹெக்டர் நிலத்தை மட்டுமில்லாமல் 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்களை.

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கங்காரு Island முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஆயிரத்திற்கும் அதிகமான கங்காருகளும், 25 ஆயிரத்திற்கும் அதிகமான கோலா கரடிகளும் தீயில் கருகி உயிரிழந்து விட்டன.

Animals Suffered - Bush Fire
Animals Suffered – Bush Fire

பொதுவாக, தண்ணீர் அருந்தாத கோலா கரடிகள் யூகலிப்டஸ் இலையில் இருந்து தனக்கான தண்ணீரை எடுத்துக்கொள்ளும் திறன் படைத்தது. ஆனால், இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த கோலா கரடி ஒன்று அங்கு ஒருவரிடம் நீர் பருகிய காட்சி காண்போரின் நெஞ்சை கதி கலங்க செய்தது.

2007 ல் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி 1 ஹெக்டர் நிலப்பரப்பில், 17.5 பாலூட்டிகளும், 20.7 பறவை இனங்களும், 129.5 ஊர்வன இன உயிரினங்களும் இருப்பதை அறிய முடிகிறது.

அதன்படி, இன்றைய சூழ்நிலையில் 50 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பையும் சேர்த்து நாம் இழந்து இருப்பது 50 கோடி உயிரினங்களை.

23 மனிதர்கள் இறந்து விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பை அரசின் மூலம் அறிய முடிகிறது. 1500 வீடுகள் எரிந்து சாம்பலாகி விட்டன. அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை அணைப்பதற்கு அமெரிக்காவில் இருந்து 1000 தீயணைப்பு வீரர்கள் தங்களது விடுமுறையை ஒதுக்கி வைத்து விட்டு ஆஸ்திரேலியா வந்து உதவி செய்து வருகின்றனர். பொது மக்களும் இணைந்து தங்களால் முடிந்த மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

150 க்கும் மேற்பட்ட விமானங்கள் நீரை தெளித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொடரும் வெப்பநிலை காரணமாக தீயணைப்பு மிக பெரிய சவாலாக அமைந்துள்ளது.

Fire Fighting
Fire Fighting – Bush Fire

உலகம் முழுதும் இந்த தீயை அணைப்பதற்க்காக முயற்சிகளும், அந்த உயிரினங்களுக்காக பிராத்தனைகளும் நடைபெற்று கொண்டுள்ளது.

இந்த காட்டு தீயை போராடி அணைத்து விடலாம். மீண்டும் ஒன்று வந்தாலும் அதற்கு நமது போராட்டமும் பிராத்தனையும் நிச்சயம் இருக்கும். ஆனால், இதற்கு காரணம்…? இயற்கையின் சீற்றம் மட்டுமா…?

நிச்சயம் இல்லை..

எங்கோ ஒரு மூலையில் நடந்த அமேசான் காட்டு தீயும், ஆஸ்திரேலியா காட்டு தீயும் நமக்கு உணர்த்தியது நமது உலகம் எதிர்கொண்டு வரும் இயற்க்கை சீரழிவை தான்.

Top View - Bush Fire
Top View – Bush Fire

இயற்கை மீது அக்கறை இல்லாமல் நாம் வாழும் வாழ்க்கை முறை ஒவ்வொரு இயற்கை சீற்றத்திலும் உணர முடிகிறது. உலக வெப்பமயமாதலை தடுக்க நம்மால் முடிந்ததை எடுப்போம்.

ஆஸ்திரேலியாவில் மழை பெய்து காட்டு தீ அனைய வேண்டும் என்பதே உலகம் முழுவதும் இன்று எதிரொலிக்கும் ஒரே வேண்டுதல். அந்த வேண்டுதலில் நாமும் இணைவோம். ஒன்றாக இயற்கையை காக்க முயற்சி கொள்வோம்.

Fire Fighters - Bush Fire
Fire Fighters – Bush Fire

இடிந்த வீடுகளை கட்டி விடலாம்…

இழந்த பொருளை சம்பாதித்து விடலாம்…

இருளை நம்பிக்கையால் போக்கி விடலாம்..

தீக்கிரையான மரங்களையும், கருகிப்போன உயிரினங்களையும் மீண்டும் உருவாக்க யுகங்கள் தேவை…

இயற்கையின் சீற்றம் எந்த வடிவிலும் இருக்கும் என்பதை இது போன்ற நிகழ்வுகள் நடு நெற்றியில் அடித்தாற்போல் உணர்த்திவிட்டு சென்று விடுகின்றன.

அந்த சுவடுகளை கொண்டு வருங்கால சந்ததியினர் வாழ உலகை அப்படியே விட்டு வைப்போம்.