1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலில் உலக கோப்பையை வென்ற வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 83 திரைப்படத்தின் trailer தற்போது youtube-ல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
1983-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு போட்டியிலாவது வெல்லுமா ?, என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்து உலக கோப்பையையே வென்று சரித்திரம் படைத்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்தை கொண்டாடும் வகையில் 83 திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஒரு முக்கிய வீரராக கரம் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விளையாட்டு வீரர்களாக நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் 2019ஆம் ஆண்டு தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி கொடுக்கப்பட்டது. அச்சு அசல் 1983 அணியின் கிரிக்கெட் வீரர்களைப் போலவே தோற்றத்தை கொண்டுவர இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் கடுமையான முயற்சியும் பயிற்சியும் மேற்கொண்டுள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகளை பொங்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உலகெங்கும் வெளியாக உள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங் (கபில் தேவ்), தீபிகா படுகோன் (ரோமி பாட்டியா), தாஹிர் ராஜ் பாஷின் (சுனில் கவாஸ்கர்), ஜீவா (ஸ்ரீகாந்த்), சாகிப் சலீம் (அமர்நாத்), ஜதின் சர்னா (யாஸ்பல் ஷர்மா), தைரியா கார்வா (ரவி சாஸ்திரி), அம்மி விர்க் (பலவிந்தர் சந்து), பார்வதி நாயர், அம்ரிதா பூரி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் தேசப் பற்றையும், விளையாட்டு மீது அவர்கள் கொண்டுள்ள உணர்வுபூர்வமான ஆதங்கங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் Box Office-ல் புது சரித்திரம் படைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
83 திரைப்படத்தின் தமிழ் டிரைலரை கீழே காணுங்கள்.
83 திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.