Specials Stories

நீரைப் போல் இரு நண்பா!!!

நம்ம தெருவுலயோ, வீட்டுக்கு பக்கத்துலயோ யாராச்சும் பார்க்க ரொம்ப ஒல்லியா, எப்பவுமே சேட்டை பண்ணிக்கிட்டே இருந்தா கண்டிப்பா அந்தப் பையனுக்கு “புரூஸ் லீ”-ன்னு பட்டப்பெயர் வைச்சிடுவாங்க. இது இங்க மட்டும் இல்ல, உலகத்துல பல்வேறு நாடுகள்ல இந்தப் பெயருக்கு அப்படி ஒரு மவுசு இருக்கு. அது சரி! புரூஸ் லீ இந்த உலகத்த விட்டுப்போய் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல ஆகியும், வெறும் முப்பத்தி இரண்டே வருடங்கள் வாழ்ந்த மனிதனை ஏன் எல்லாரும் ஞாபகம் வச்சு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

சீன மரபு படி புரூஸ் லீ பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ரெண்டுமே டிராகன், இந்த ராசிக் குறியிட்டுல பிறந்தவர்கள் போராட்ட குணமும் வீரமும் கொண்டவர்களாக இருப்பாங்கன்னு நம்பிக்கை.

நவம்பர் 27, 1940-ல அமெரிக்காவுல பிறந்த புரூஸ் லீ-ஐ, அவர் பெற்றோர்கள் சில நாட்களிலேயே அவங்க சொந்த ஊரான ஹாங்காங்கிற்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அவர் வாழ்க்கை முழுமையுமே சினிமாவுக்காக அர்ப்பணிச்சாருன்னா, உங்களால நம்ப முடியுமா?

கைக்குழந்தையா இருக்கும்போதே அவருடைய பெற்றோர்கள் வருமானத்திற்காக அவரை சிறப்பு வேடங்கள்ல நடிக்க வச்சாங்க. சிறுவயதிலிருந்தே துருதுருவென இருக்கும் நம்ம புரூஸ் லீ ஒரு இடத்தில் 5 நிமிடம் கூட அமைதியா உட்காரமாட்டாராம். அதனாலேயே அவருக்கு படிப்பில் நாட்டமில்லாம போச்சு. இன்னும் சரியா சொல்லணும்னா அந்தக் கல்வி அமைப்பே அவருக்கு பிடிக்கல.

எல்லாருடைய வாழ்க்கையிலும் அவங்க திறமையைக் காட்டுற தருணம் ஒன்னு வரும், நம்ம புரூஸ் லீக்கும் அப்படிப்பட்ட தருணம் வந்துது. தன் பள்ளிக்கூடம் சார்பா அவரை ஒரு குத்துச்சண்டை போட்டியில கலந்துக்க சொன்னப்போ, அந்தப் போட்டிக்காக தான் “Kung-Fu” தற்காப்பு கலையை கத்துக்கிட்டாரு. அந்தப் போட்டியின் இறுதிகட்டத்தில அதற்கு முன் 3 முறை அந்த பதக்கம் வென்ற வீரரை, வெறும் இரண்டே நிமிடங்களில் தோற்கடித்து ஒரு புது அவதாரம் எடுத்தாரு.

அதுதான் அவருடைய ஆரம்பம். புரூஸ் லீ-ன் பெற்றோர்கள் அவருடைய teenage பருவத்தில் திரும்பவும் அமெரிக்கா அனுப்பிச்சாங்க. அங்க “Showdown”-னு சொல்லப்படுற ஒரு குத்துச்சண்டை போட்டியில தன்னை விட 3 மடங்கு அதிக எடை உள்ள வீரரை இரண்டே நிமிடங்களில் தவிடுபொடி ஆக்கினாரு.

அப்போதான் “Kung-Fu” அமெரிக்காவுல பிரபலம் ஆச்சு. தன் கலையை ஹாலிவுட் படங்கள்ல காட்ட ஆரம்பிச்சாரு. அவருடைய குத்துச் சண்டை காட்சிகளை திரைப்பட இயக்குனர்கள் இயல்பான வேகத்தைவிட ரொம்ப குறைத்து தான் காட்டுவாங்களாம்.

ஏனென்றால் அவர் ஒரே நொடியில 9 குத்துக்கள் விடுவாராம். ஒரு கட்டத்துல அமெரிக்காவுல “Kung-fu”வை புரூஸ் லீ யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாதுன்னு சொன்னப்போ, அதை மறுத்து அவரைப் போலவே ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரரை, எதிர்த்து சண்டைபோட்டு மூன்றே நிமிடங்கள்-ல வீழ்த்தியும், ஒருவரை வீழ்த்துவதற்கு மூன்று நிமிஷம் ஆகிடுச்சே-னு நினைச்சு அந்த வெற்றியைக் கூட அவர் கொண்டாடல.

இப்படி சாமானியர்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள ரொம்ப சாதாரணமா செய்வதாலேயே இவருக்கு “Alien”-னு ஒரு செல்லப் பெயரும் இருக்கு. வாழ்க்கையில எங்க இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், நம்ம புத்தியை ஒரு நீர் போல இடத்திற்கு ஏற்ற மாதிரி மாத்திக்கணும்னு அவர் சொன்னது எல்லாருடைய மனசுலயும் அவர உறுதியா உட்கார வச்சது. இந்த நேரத்துல அவர் நம்ம கூட இல்லனாலும், “உங்க வாழ்க்கையை நீங்க எனக்காக வாழ வரல, நான் என் வாழ்க்கையை உங்களுக்காக வாழ வரல”-ன்னு, அவர் சொன்னது எல்லாரையுமே அவருடைய ரசிகனா மாத்துச்சு. அப்படிப்பட்ட புரூஸ் லீயை அவருடைய பிறந்த நாளில் நினைவு கொள்கிறது சூரியன் FM.

Article by RJ Karthik

Tags

About the author

shafin

உங்களில் ஒருவன்