Cinema News Stories

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்!

ஹலிதா ஷமீமின் ’மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான்.

முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் குடும்பத்தில் இருந்து வந்துள்ள கதீஜா ரஹ்மான், ஏற்கனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில் தற்போது ‘மின்மினி’ படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற செய்தியை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

‘மின்மினி’ படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்குகிறார், மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என 8 வருடங்களாக மெனக்கெட்டு காத்திருந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து ‘மின்மினி’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கௌரவ் காளை, பிரவின் மற்றும் கௌரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ’பூவரசம் பீப்பி’, ’சில்லு கருப்பட்டி’, ’ஏலே’ மற்றும் ’லோனர்ஸ்’ (ஆந்தாலஜி ’புத்தம் புது காலை விடியாதா’வின் ஒரு பகுதி) உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹலிதா ஷமீமின் முந்தைய படைப்புகள் காரணமாக ‘மின்மினி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.