வெறும் மூன்று படங்கள் தான். ஆனால் அந்த மூன்று படங்களின் கதைக்களமும், கதை அமைப்பும், நடிகர்களும், கதை சொல்லப்பட்ட விதமும், எடுத்துக் கொண்ட கருவும் மிக மிக வித்தியாசமானதாகவும் முக்கியமானதாகவும் அமைந்து, அந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், ஒரு சிலரிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் பெற்ற இந்த மூன்று படங்களுக்குள்ளும் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு புள்ளியில் ஒன்றாக நிற்கிறது. அது அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை சொல்லிய படங்களாக அமைந்தது.
இப்படி தொடர்ந்து மூன்று படங்களிலும் மிக அடர்த்தியான கதைக்களங்களில் பயணித்த ஓர் இயக்குனரைப் பற்றித் தான் நாம் இப்போது பேசப் போகின்றோம். அவர்…. திருநெல்வேலியில் பிறந்த “மாரி செல்வராஜ்”. ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்று தான் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். ஆனால் நடிகராக வேண்டும் எண்ணத்தை விட்டுவிட்டு அவர் உதவி இயக்குனராக, “இயக்குனர் ராமிடம்” பணியாற்றினார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், “நீலம் ப்ரொடக்ஷன்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய “இயக்குனர் பா.ரஞ்சித்தின்” முதல் தயாரிப்பான “பரியேறும் பெருமாள்” என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2018 இல் வெளியான போது மக்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஒரு வித்தியாசமான கதை கருவையும், கதைக்களத்தையும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களினுடைய நிலையையும் சொல்லுகின்ற படமாகவும் அமைந்தது.
பரியேறும் பெருமாள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் 2019 ஆம் ஆண்டு “நார்வே தமிழ் திரைப்பட விழாவில்” கலந்துகொண்டு சிறந்த படத்திற்கான விருதையும் வாங்கியது. பரியேறும் பெருமாள் படம் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த மாரி செல்வராஜ், 2021 ஆம் ஆண்டு “கலைப்புலி எஸ் தானு” தயாரிப்பில் “நடிகர் தனுஷின்” 40ஆவது படமான ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கினார். 1995 ஆம் ஆண்டு நடந்த கொடியன்குளம் வன்முறை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதை பின்னாளில் மாரி செல்வராஜ் மறுத்தார்.
இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முழுக்க முழுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்தப் படம் வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. தனுஷின் திரை வாழ்க்கையில் கர்ணன் திரைப்படம் மிக மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கர்ணன் திரைப்படம் போற்றப்படுகிறது. மிகச்சிறந்த இயக்குனராக மாரி செல்வராஜை உயர்த்திய படம் கர்ணன் திரைப்படம்.
இப்படி அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளையும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தைரியமாக சொன்ன மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அது 2023 இல் வந்த “மாமன்னன்” என்ற திரைப்படம். அமைச்சராவதற்கு முன்னதாக “உதயநிதி ஸ்டாலின்” நடித்த நிறைவுப் படம் இந்த திரைப்படம்.
2023 இல் வந்த மாமன்னன் திரைப்படம் அதுவரை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட “வடிவேலுவை” ஒரு குணச்சித்திர நடிகராக காட்டியதோடு மட்டுமல்லாமல் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தையே திரைப்படத் தலைப்பாகவும் வைத்து கதையை மிக நேர்த்தியாக சொன்ன மாரி செல்வராஜ் இந்த முறை மாமன்னனுக்காக எடுத்துக் கொண்ட படப்பிடிப்பு தளம் சேலம் மாவட்டம். 35 கோடியில் தயாரிக்கப்பட்டு 52 கோடி ரூபாய்க்கு வசூல் செய்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
மாமன்னன் எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ கட்சிக்குள் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதை மிகத் தெளிவாகவும், தைரியமாகவும் மாமன்னன் மூலம் சொன்ன மாரி செல்வராஜ்… தொடர்ந்து மூன்று படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து அதே நேரத்தில் அவர்களின் நியாயங்களுக்காக சினிமா மூலமாக கருத்துகளை சொன்ன மாரி செல்வராஜ் அடுத்து “வாழை “என்ற திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.
இப்படி தமிழ் திரை உலகின் மிக முக்கியமான இளம் இயக்குனர்களில் ஒருவராக கவனிக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற மாரி செல்வராஜ் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக, எழுத்தாளராக, ஒரு பேச்சாளராக, சமூக ஆர்வலராக என பன்முகக்கலைஞனாக வலம் வருகிறார். மாரி செல்வராஜின் பிறந்த தினம் மார்ச் 7 இன்றைய தினம். இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இன்னும் பல படங்களை வித்தியாசமான கதைக்களங்களோடும், அழுத்தமான கதைகளோடும் சொல்ல வேண்டும் என்று வாழ்த்தி எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சிறப்புடன் வாழ சூரியன் எப்எம் தன் வாழ்த்துகளை காற்றலையில் அனுப்பி வைக்கிறது.