Cinema News Stories

நடிப்பின் அரசன் ’நாசர்’

சினிமா வேணாம்னு சொல்ற அப்பா பாத்திருப்போம், அடிச்சு மிரட்டி சினிமால தான் நீ சேரனும்னு சொன்ன அப்பா யார் தெரியுமா…!!! நடிகர் நாசர் அவர்களின் தந்தை மெகபூப் அவர்கள் தான்…

விமானப்படையில் வேலை கிடைத்தும் கூட பள்ளி வயதிலிருந்தே நாசர் தெருக்கூத்துகளில் தனது அபாரமான திறமையை வெளிக்காட்டி நடித்திருக்கின்றார், வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் வேலை செய்த மெகபூப் தன் மகன் நடிகனாக வேண்டும் என விரும்பி இருக்கின்றார். ஆரம்பத்தில் சிறிது முயற்சி செய்து தோல்வியுற்றதால் மனமுடைந்து வேறு வேலைகளுக்கு முயற்சி செய்து விமானப்படையில் சேர்ந்திருக்கிறார் நாசர்.

அந்த வேலையெல்லாம் வேண்டாம் நிச்சயமாக நீ சினிமாவில் சாதிப்பாய் என்று கூறி மறுபடியும் சினிமாவிற்கு முயற்சி செய்ய அனுப்பி வைத்திருக்கின்றார் நாசர் அவர்களின் தந்தை. அதன் பின் நடந்தது வரலாறு. அது எப்படி ஒருவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், எந்த கெட்டப் கொடுத்தாலும் மிக எளிதாக அந்தக் பாத்திரத்திற்கு உயிரூட்ட முடிகிறது.

நான் குறிப்பிடும் படங்களில் நாசர் அவர்களின் கதாபாத்திரத்தை ஒரு முறை நினைத்து பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் அவருடைய பாத்திரம் விரியும். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கெட்டப்புகள் தேவர் மகனில், விஸ்வரூபத்தில், எம்டன் மகனில், குருதிப்புனலில், ஜீன்ஸ் படத்தில் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்கள், கபாலியில், பாம்பே, இருவர், மின்சார கனவில் பார்வையற்றவராக ஒரு கதாபாத்திரம் பாகுபாலிகளை மிரள வைக்கும் ஒரு கதாபாத்திரம் என அத்தனையிலும் அத்தனை நேர்த்தி அத்தனை வித்தியாசம்.

தமிழ் சினிமாவின் பிதாமகன் கே.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகமான நாசர், கல்யாண அகதிகள் என்ற படத்தில் 1985 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். அதன் பிறகு SP முத்துராமன் இயக்கத்தில் வெளியான Super Star-ன் வேலைக்காரன் படத்தில் வில்லன் ஆனார். பின்பு யூகி சேது அவர்களின் கவிதை பாட நேரமில்லை என்ற படத்தில் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த பாத்திரத்தை பார்த்த பிறகு தான் கமலஹாசன் தன் நாயகன் படத்தில் நடிக்க அழைத்திருந்தார், நாயகன் படத்தில் அவருடைய நடிப்பில் மயங்கிய கமலஹாசன் மற்றும் மணிரத்னம் பிற்காலத்தில் அவர்களுடைய படங்களில் கண்டிப்பாக நாசர் இடம் பெறும் படி பார்த்துக் கொண்டனர். 1995-ல் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நாசர், அவதாரம் என்ற படத்தை எடுத்தார்.

தன் வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே பார்த்த தெருக்கூத்தை மையமாக வைத்து அந்த படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலுக்காகவே அவருக்கு கோடிமுறை நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்… நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட், பிளேபேக் சிங்கர் என்று பன்முகத்தன்மை இருந்தாலும் கூட தான் மிகப்பெரிய ஒரு பேச்சாளர் என்று தோனி பட ஆடியோ லாஞ்சில் நிரூபித்திருப்பார்.

தென்றல் வந்து தீண்டும் போது பாடல் உருவான விதத்தை அவ்வளவு நகைப்புடனும் உயிர்ப்புடனும் கூறியிருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்ல ஹிந்தி மொழியிலும் ஆங்கில படத்தில் ஒன்றிலும் நடித்திருக்கின்றார். உலகெங்கும் தமிழனை பெருமை கொள்ளச் செய்யும் நாசர் அவர்களுக்கு சூரியன் எஃப் எம் இன் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

Article By Roopan Kanna