Specials Stories

Contact Lens உபயோகிப்பவரா நீங்கள்? இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் கண்ணாடி அணியாதவர்களை பார்க்கவே முடியாது. நமது தாத்தா, பாட்டி காலத்தில் 60 வயதில் ஆரம்பித்த கண் பிரச்சனைகள் எல்லாம், இப்போது ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளுக்கு வந்துவிடுகிறது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை என சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டியுள்ளது.

நவீன மயமாகியுள்ள இக்காலத்தில் யாரும் கண்ணாடி அணிய விரும்புவது கிடையாது. கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, அவை ஃபேஷனின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. கான்டாக்ட் லென்ஸின் வரலாறு மற்றும் பயன்பாடு குறித்த சுவாரஸ்யமான சில தகவல்களை தற்போது பார்ப்போம்.

1508-ம் ஆண்டு லியோனார்டோ டாவின்சி பல வகையான காண்டாக்ட் லென்ஸ்களை வரைந்து விவரித்தார். ஆனால் உண்மையில் அப்போது லென்ஸ் அல்லது அதற்கான எந்த சாதனத்தையும் உருவாக்கவில்லை. மற்றவர்கள் அதற்குப் பிறகு Corneal Contact Lens-களை அடிப்படை வடிவங்களில் விவரித்தனர்.

எவ்வாறாயினும், 1887 ஆம் ஆண்டு வரை எஃப்.இ.முல்லர் என்ற ஜெர்மன் கண்ணாடி ஊதுபவர் விழித்திரை போன்ற முதல் சாதனத்தை உருவாக்கினார். பின்னர் 1929 ஆம் ஆண்டில், ஜோசப் டல்லோஸ் என்ற ஹங்கேரிய மருத்துவர் உயிருள்ள கண்களிலிருந்து அச்சுகளை எடுக்கும் முறையை முழுமையாக்கினார், இதனால் லென்ஸ்கள் கண் வளைவுகளுக்கு மிகவும் நெருக்கமாக ஒத்துப்போயின.

இன்று நாம் அறிந்த காண்டாக்ட் லென்ஸ்கள் 1936 ஆம் ஆண்டு வரை உருவாக்கப்படவில்லை, அப்போது வில்லியம் ஃபைன்ப்ளூம் (William Feinbloom) என்ற நியூயார்க்கை சேர்ந்த பார்வை மருத்துவர், முதல் அமெரிக்கன் காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கி பிளாஸ்டிக் லென்ஸ்கள் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தினார்.

1960 ஆம் ஆண்டில், செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஓட்டோ விக்டர்லே மென்மையான லென்ஸுக்குப் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருளை முதல் முறையாக உருவாக்கினார். இது ஒரு மென்மையான, ஹைட்ரோஃபிலிக் (நீர் உறிஞ்சும்) பிளாஸ்டிக் ஆகும், இது இப்போது Polymacon என்று அழைக்கப்படுகிறது.

1971 ஆம் ஆண்டில், Bausch & Lomb என்ற நிறுவனம் மென்மையான காண்டாக்ட் லென்ஸ்கள் தொழில்நுட்பத்தை உலகிற்கு கொண்டு வந்தது. இந்த லென்ஸ்கள் Bausch & Lomb Soft lens என அழைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், பல நிறுவனங்கள் சிலிகான் அடிப்படையிலான மென்மையான லென்ஸ்களை உருவாக்கியுள்ளன, அவை மற்ற லென்ஸ்களை விட ஆறு மடங்கு அதிக ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைக் கொண்டுள்ளன.

அந்த லென்ஸ்கள் சிலவற்றை முப்பது நாட்கள் வரை அகற்றாமல் இரவும் பகலும் தொடர்ந்து அணிய FDA ஒப்புதல் அளித்துள்ளது. கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் போது மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் கண்புரை ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும் 24 மணி நேரமும் கான்டாக்ட் லென்ஸ் அணிவது கண் சம்பந்தப்பட்ட தொற்று நோய்களை உருவாக்கும். யாராவது கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு உறங்கினால், அது கண்களுக்கு ஹைபோக்ஸியா பாதிப்பை கொண்டு வரும்.

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதை முறையாக அதற்கான திரவம் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். லென்ஸ் வைப்பதற்கென கொடுக்கப்படும் பெட்டிக்குள் அதை ஃப்ரெஷ்ஷான திரவத்தில் ஊறவைக்கவேண்டும். வெளியே செல்லும்போது லென்ஸை சுத்தப்படுத்தும் திரவத்தை எடுத்து வர மறந்து விட்டால் சிலர் எச்சிலைத் தொட்டு சுத்தப்படுத்தி அப்படியே பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் தவறானது.

=கான்டாக்ட் லென்ஸ் என்பது கருவிழியின் மேல் பொருத்தப்படுவது. எனவே அதை முறையாகப் பராமரிக்காவிட்டால் தொற்று ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி பார்வையையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடியலாம். முறையாக பயன்படுத்துவோருக்கு கான்டாக்ட் லென்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

Article By Smily Vijay