Cinema News Specials Stories

தளபதி விஜய்-யின் தனி சாம்ராஜ்யம்!

‘திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா படை நடுங்கும்’ தளபதி விஜய்க்கு அத்தனை பொருத்தமான வரிகள்.

ஏன் இவருக்கு இத்தனை ரசிகர்கள், ஏன் இவர் திரையில் தோன்றும்போது அத்தனை ஆரவாரம். தமிழ் சினிமாவில் தனக்கென இப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல. ஆனாலும் அதற்கு முன்னோடியாக பல நடிகர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

அறிமுக படம் முதலே ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாக நினைத்தவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அறிமுகமான புதிதில் சில படங்கள் நடித்திருந்தாலும் பூவே உனக்காக படத்தின் மூலம் தான் பெரும்பாலான தமிழ் சினிமா பார்வையாளர்களின் இதயத்தில் இடம்பிடித்தார் இளையதளபதி.

தொடர்ந்து துறுதுறு இளைஞனாக காமெடி, காதல், சென்டிமென்ட், கொஞ்சம் ஆக்‌ஷன் என உணர்வுப்பூர்வமான குடும்பப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து முழுநீள காதல் திரைப்படங்களிலும் நடித்தார். இப்படியாக உருவானது தான் காதலுக்கு மரியாதை, லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் உள்ளிட்ட படங்கள். பக்கத்து வீட்டு இளைஞனாக பலரையும் கவர்ந்தார். இந்த படங்கள் விஜய்க்கென பல பெண் ரசிகைகளை உருவாக்கியதோடு Family Audience கூட்டத்தையும் பெருமளவு அதிகரித்தது.

இடையில் சில படங்கள் வெற்றி பெறா விட்டாலும் பெரும்பாலான படங்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட். தமிழகம் முழுக்க விஜய் படங்களுக்கான தனி மார்க்கெட் உருவானது. பல திரைப்படங்கள் நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தன. இந்த வெற்றிப் பயணம் குஷி, ப்ரியமானவளே, பத்ரி, வசீகரா படங்கள் வரை தொடர்ந்தது.

அதன் பிறகு வெளியான பகவதி படத்தில் தன்னுடைய ஆரம்பகால ஆசையை செயல்படுத்த தொடங்கினார். முதல் பாதியில் வழக்கமான துறு துறு விஜயாகவும் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் நடித்தார். தமிழ் ரசிகர்கள் அதனை வரவேற்றனர். அடுத்ததாக திருமலை படத்தில் புது பாணியில் பஞ்ச் வசனங்களுடன் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கினார். படம் ஹிட். அடுத்து வெளியானது கில்லி.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே கில்லி படத்திற்கென தனியொரு இடம் உண்டு. கில்லி தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இளைய தளபதி தளபதியானார். துப்பாக்கி படத்தின் மூலம் ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். இறுதியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் படங்களும் இதற்கு உதாரணம்.

இது ஒருபுறமிருக்க இவரது பாடல்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு. இவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் முழுவதும் பெரும்பாலும் ஹிட். அதுமட்டுமின்றி அவ்வப்போது அவரது படங்களில் ஒரு பாடலை மட்டும் விஜய் பாடுவார். இப்படியாக இதுவரை விஜயின் குரலில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட். விஜயின் குரலில் உருவாகும் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

அடுத்து நடனம்… விஜயின் நடனத்திற்கென தனி ரசிகர்கள் உண்டு. எவ்வளவு கடினமான நடன அசைவுகளையும் எளிதாக ரசிக்கும் படியாக மாற்றி ஆடக் கூடியவர். பிரபுதேவா, லாரன்ஸ் என முன்னணி நடன இயக்குநர்கள் பலருடனும் இணைந்து அசத்தியுள்ளார். இப்படி விஜயின் படங்களில் இடம்பெறும் அறிமுகப்பாடல்கள் அனைத்தும் பார்வையாளர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் ஆடத் தூண்டும் வகையில் இருக்கும்.

தமிழில் பல நடிகர்கள் வித்தியாசமான தோற்றத்தில், கதாபாத்திரத்தில் தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தாலும், கதாபாத்திரத்திற்கென தோற்றத்திற்கென பெரிதாக மெனக்கெடாமல், தனக்கென தனியொரு பாணியை உருவாக்கிய ஒரு சில முன்னணி நடிகர்களில் விஜய்யும் ஒருவர். குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களை கவரக்கூடிய அம்சங்கள் படத்தில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இதனாலேயே இவரது படங்கள் வெளியாகும் நாள் ஒரு திருவிழா போல இருக்கும்.

இதைத்தாண்டி பெரும்பாலானோர் கவனிக்காதது விஜயின் நகைச்சுவை. ப்ரெண்ட்ஸ், சச்சின், வசீகரா படங்களை பார்த்து ரசித்து சிரிக்காதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. விஜய் மற்றும் வடிவேலு கூட்டணி சூப்பராக ஒர்க் அவுட் ஆகும். காவலன், போக்கிரி படங்களும் அதற்கு சிறந்த உதாரணம். இப்படி பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் விஜய்.

ஒவ்வொரு படத்திற்கும் குறித்த நேரம் தவறாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுக்கக் கூடியவர். சினிமாவை முழுமையாக நேசிப்பவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்களுக்கென நேரம் ஒதுக்கி அவ்வப்போது அவர்களை சந்தித்து வருகிறார்.

மேலும் தன்னுடைய ரசிகர் மன்றங்களின் மூலம் பல நலத்திட்டங்களை செய்வதோடு சமூக பிரச்னைகளில் பாதிக்கக்கூடிய மக்கள் பக்கம் நின்று ஆறுதல் அளித்தும் வருகிறார். விஜய்யை மக்கள் இந்தளவு கொண்டாடுவதற்கான காரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.

சிறுவயதிலேயே சினிமாவால் ஈர்க்கப்பட்ட விஜய் தந்தையின் உதவியுடன் சினிமாவிற்குள் எளிதில் நுழைந்து விட்டாலும், ஆரம்பத்திலிருந்து இன்று வரை அவர் சந்தித்த, சந்திக்கும் விமர்சனங்கள் ஏராளம். இவையனைத்தும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கியதோடு குழி தோண்டி புதைத்து அதனை அஸ்திவாரமாக்கி விடாமுயற்சியுடன் இன்று தனக்கென தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியுள்ளார். இதனாலேயே ரசிகர்கள் பலரும் விஜய்யை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். விமர்சனங்களை கடந்த அவரது வெற்றியை தங்களுடைய வெற்றியாக நினைக்கின்றனர்.

Design Design Ah, Problems Will Come And Go, Konjam Chill Pannu Mapi! இன்று பிறந்தநாள் காணும் நடிகர் விஜய்க்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo