விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ‘முகமது ஷமி’. ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இந்தியா இழந்தாலும், இந்த உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு மிகச் சிறந்த தொடராக அமைந்தது.
ஒரு சிலரை தவிர இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், குறிப்பாக பந்துவீச்சாளர்கள் இந்திய அணி இறுதிப்போட்டி வரை செல்வதற்கு பெரும் உறுதுணையாக இருந்தனர்.
அதிலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது . 33 வயதான ஷமி, ODI உலகக் கோப்பையில் முதல் நான்கு ஆட்டங்களில் மெயின் Playing 11-ல் இடம்பெறாமல் இருந்து ஹார்டிக் பாண்டியாவின் விலகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை பிரகாசமாக பயன்படுத்தி 7 ஆட்டங்களில் வெறும் 5.26 சராசரியில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
பல தடைகளை தாண்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த முகமது ஷமிக்கு நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருதினை அளிக்க விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
ஷமியை தவிர, அஜய் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்) ஓஜஸ் பிரவின் தியோடலே, அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), பருல் சவுத்ரி மற்றும் எம் ஸ்ரீசங்கர் (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர் வைஷாலி (சதுரங்கம்), திவ்யகிருதி சிங் மற்றும் அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திக்ஷா தகர் (கோல்ப்), கிரிஷன் பகதூர் பதக் மற்றும் சுசீலா சானு (ஹாக்கி), பிங்கி (புல்வெளி பந்து), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சூடு), ஆன்டிம் பங்கால் (மல்யுத்தம்), அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு) உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் .
மற்றொரு உயரிய விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு ஆசிய போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் பரிந்துரைக்கப்படுள்ளனர். பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு கணேஷ் பிரபாகரன் (மல்லகாம்ப்), மகாவீர் சைனி (பாரா தடகளம்), லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்) மற்றும் சிவேந்திர சிங் (ஹாக்கி) என ஐந்து பயிற்சியாளர்கள் பரிந்துரையில் உள்ளனர்.
கவிதா (கபடி), மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்) மற்றும் வினீத் குமார் சர்மா (ஹாக்கி) ஆகியோர் தியான் சந்த் வாழ்நாள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்.