Stories

முடிவுக்கு வருகிறது சுந்தரியின் பயணம்!

கருமையாக இருப்பதால் ஒரு பெண் என்னென்ன பாகுபாடுகளை எதிர்கொள்கிறாள்? வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு எதிராக எப்படி போராடுகிறாள்? தன் இலக்கை அடைவதற்கான பாதையில் வரும் பல ஏற்றத்தாழ்வுகளைக் எவ்வாறு கடந்து செல்கிறாள் போன்ற பழகிப் போன பழைய Template என்றாலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் “சுந்தரி”.

சன் டிவியில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட சுந்தரி தொடரில் கேப்ரியல்லா செல்லஸ் சுந்தரியாகவும், ஜிஷ்ணு மேனன், ஸ்ரீகோபிகா நீலநாத், அரவேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகின்றனர். அழகர் இயக்கி வருகிறார்.

தொடக்கத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கொரோனா, ஒளிபரப்பு நேர மாற்றம் போன்ற சில காரணங்களால் சிறு சறுக்கல்களை சந்தித்த சுந்தரி, கதையின் கரு போலவே மீண்டு எழுந்து மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றித்தொடராக மாறியது.

சரியான கதாபாத்திர தேர்வு, நடிகர்களின் பொருத்தமான நடிப்பு, பெரும்பாலான தமிழ் குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையிலான காட்சி வடிவமைப்பு போன்ற காரணங்களால் சுந்தரி கதாபாத்திரத்தை தன்னுடன் பல பெண்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கின்றனர். சுந்தரி மிகப்பெரிய வெற்றித் தொடராக மாறியதற்கு இது மிக முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் நல்ல TRP யையும் கொடுத்து 700 எபிசோடுகளை கடந்துள்ளது.

எந்த தடை வந்தாலும் மனம் தளராமல் போராடி ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கருப்பொருளை நோக்கி பயணத்தை தொடரும் சுந்தரி சீரியல் சிறப்பு க்ளைமாக்ஸுடன் தனது பயணத்தை விரைவில் முடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண பெண்ணின் வாழ்க்கையை பிரிதிபலிக்கும் சுந்தரிக்கு என்றுமே தமிழ் மக்களின் மனதில் இடமிருக்கும் என்றால் அது மிகையாகாது.

Article By Sathishkumar Manogaran