கம்பீர உருவம், கருத்த மேனி, தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி.
இன்றும் பல கிராமங்களில் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திருவிழா நடத்தி வணங்கி வருகின்றனர். இப்படி பலரின் இஷ்ட தெய்வமாக இருக்கும் கருப்பசாமியின் வரலாறு பற்றி கொஞ்சம் பார்ப்போம். கருப்பசாமி என்றவுடன் பலருக்கு பயமும் பக்தியும் அதிகரிக்கும். இவர் இரவில் அவரது குதிரையில் கிராமங்களை வலம் வருகிறார், அவர் வரும்போது கால் சலங்கை ஒலியும், குதிரையின் சத்தமும் கேட்கும் என்றும் கூறுகின்றனர் கிராம மக்கள்.
இப்படி பலவிதமாக கூறப்படும் கருப்பசாமி, மலையாள தேசமான கேரளாவில் பிறந்தவர் என்று கூறுகின்றனர். அதற்கு சிறிது சான்றாகவும் கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படியின் அருகே அவர் அமைந்திருப்பார். முன்னொரு காலத்தில் கேரளாவில் ஒரு அரசரின் ராஜ்ஜியத்தில் பெரும் வீரனாக இருந்து, அந்த ராஜாவின் ஆணைக்கினங்க ஒரு வேலை காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்து அதை முடித்து செல்லும்போது, தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்கினால்தான் இங்கேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ராமரின் மனைவி சீதையின் கர்ப்ப காலத்தில் சீதா தேவியை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் விட்டு சென்று விட்டனர். அவருக்கு குழந்தையும் பிறந்தது. அவனது பெயர் “லவன்”, சில வருடங்கள் கழித்து சீதை தண்ணீர் எடுக்க போவதாகவும் மகன் “லவனை” பார்த்துக்கொள்ளும்படியும், வால்மீகி முனிவரிடம் விட்டு சென்றுள்ளார். சீதா தேவி வந்து அவரது மகன் “லவனை” சோறு ஊட்டுவதற்கு அழைத்து சென்று விட்டார்.
இது தெரியாமல், வால்மீகி வந்து பார்க்கும்போது அங்கு “லவன்” இல்லை என்று தெரிந்து, எங்கே சீதா வந்து கேட்டு… தான் சாபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்று, தர்பை புல்லை வைத்து யாகம் நடத்தி அவரது மகன் போலவே இன்னொருவனை உருவாக்கினார். ஆனால் சீதாதேவி லவனுடன் அங்கு வந்தபிறகு, வால்மீகி முனிவர் இனி இவனையும் நீதான் உன் மகனாக வளர்க்க வேண்டும் என்றார். அவனுக்கு குசன் என்று பெயர் வைத்தனர்.
சிறிது நாட்கள் கழித்து அங்கு ராமர், சீதையையும் தன் மகனையும் அழைக்க வர… அங்கு இரண்டு மகன்கள் இருப்பதால் யார் என்னுடைய மகன் என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டு கோபமடைந்த சீதை லவனையும், குசனையும் நெருப்பில் இறங்க செய்தார், அதில் லவன் மட்டும் அப்படியே வந்து விடுகிறான். குசன் உள்ளேயே கருகி விடுகிறான். பிறகு ராமன் குசனுக்கு உயிர் கொடுத்து அவனை “கருப்பா” என அழைத்தார். அன்றுமுதல் அவர் கருப்பசாமியாக உருவெடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
இப்படி ஒரு கதை சொல்லப்பட்டு வந்தாலும் இதற்கு பெரிதும் ஆதாரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியாக கருப்பசாமிக்கு பல கதைகள் இருந்தாலும், இவருக்கு பல ஊர்களில் முத்து கருப்பு, சங்கிலி கருப்பு, வண்டி கருப்பு, ஒண்டி கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு என பலநூறு பெயர்களும் உண்டு. அந்தந்த ஊருக்கேற்றாற் போல் பலவிதமாக பூஜை செய்து வருகின்றனர்.
இவருக்கு சுருட்டு, ஆட்டு கிடாய், சேவல், சக்கரை பொங்கல், ரோஜா மாலை என பல பரிவாரங்களுடன் படையலிட்டு குடும்பத்தில் மூத்த தலைமுறையாக நினைத்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அவர் கேட்பவர்களுக்கு கேட்கும் வரங்களை தருபவராகவும், பலருக்கும் காவலாகவும் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கருப்பசாமியை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை Comment பண்ணுங்க.