Specials Stories

கடவுள் எப்படிப்பட்டவன்? – கவியரசு கண்ணதாசன்

கடவுள் எப்படிப்பட்டவன்? | What is God like?
கடவுள் எப்படிப்பட்டவன்? | What is God like?

கவியரசு கண்ணதாசன் அவர்கள் அருளியது. (படித்ததில் பிடித்தது)

ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.
மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.
“அவன் தான் கடவுள்”

பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்.
பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.
“அவன் தான் கடவுள்”

பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.
அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.
பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
“அவன் தான் கடவுள்”

கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்.
அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.
“அவன் தான் கடவுள்”

ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.
பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான்.
“அவன்தான் கடவுள்”

அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.
அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
“அவன் தான் கடவுள்”

தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.
அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.
“அவன்தான் கடவுள்”

நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்.
அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.
“அவன் தான் கடவுள்”

புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.
தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.
“அவன் தான் கடவுள்”

கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.
தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.
“அவன் தான் கடவுள்”

மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.
சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.
பின்னிருந்து இயக்குவான்.
“அவன் தான் கடவுள்”

தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.
(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.
“அவன் தான் கடவுள்”

Article By – செல்வராஜ், கோவை.

About the author

Sakthi Harinath