Specials Stories

Camera Day: லென்ஸ் வழியே…

Camera Day
Camera Day: லென்ஸ் வழியே...

Camera Day – ஒரு மனிதரை நேரில் பார்ப்பதை விட மிகவும் தெளிவாகவும், எந்த ஒரு தயக்கமும் இன்றியும் புகைப்படத்தில் பார்க்க முடியும். இன்னும் சிலர் நேரில் பார்ப்பதை விட புகைப்படங்களில் மிகவும் அழகாகத் தெரிவார்கள். ஏன், நம் விஜய் சேதுபதி ஒரு முறை கூறியுள்ளார்… தனது நண்பர்கள் தன்னிடம், “நீ நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் மிகவும் வசீகரமாக இருக்கிறாய்” என்று சொன்னதாக.

விஜய் சேதுபதி என்றதும் எனக்கு ஞாபகம் வருவது 96 படத்தில் வரும் ராம் கதாபாத்திரம். ஒரு புகைப்படக் கலைஞராக அவர் நடித்திருப்பார். அந்தப் படத்தில் வரும் இடங்களைப் பார்க்கும்போதும் சரி, “இவ்வளவு பெரிய வேலை வேண்டாம், ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞராக இருந்தாலே போதும்” என்று நண்பன் படத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞராக வேண்டும் என்று கனவு காணும் வெங்கட் கதாபாத்திரத்தில் நடித்த ஶ்ரீகாந்தும் சரி,

மயக்கம் என்ன படத்தில் கார்த்திக் கதாபாத்திரமாக வரும் தனுஷும், புகைப்படக்கலையை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்மில் பலருக்கும் ஏற்படுத்தியிருப்பார்கள். அந்த அளவிற்கு நுணுக்கமானதும், ஈர்ப்புமிக்கதுமான ஒரு துறைதான் புகைப்படக்கலை.

அதேபோல், நாம் அனைவரின் நினைவுகளையும் பல வருடங்கள் கழித்தும் அசைபோட வைக்கும் புகைப்படங்களுக்கு காரணம், இந்த உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான கேமராதான். நிமிர் படத்தில் உதயநிதியின் தந்தையாக அதாவது செல்வத்தின் தந்தையாக நடித்த மகேந்திரன், ஒரு புகைப்படத்திற்காக எப்படி பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு காட்சியில் வருவார். அந்தக் காட்சி அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் சமர்ப்பணம்.

டேனிஷ் சித்திக்கி, அர்ஜுன் மேனன், தௌசீஃப் முஸ்தஃபா, லெப்டினன்ட் கர்னல் வருண் பாசின்… இவர்கள் இந்திய புகைப்பட பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள். உலகின் மிக ஆபத்தான போர் மண்டலங்கள் மற்றும் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறைந்த இராணுவப் பகுதிகளுக்குள் சென்று, வரலாற்றின் முக்கிய தருணங்களை தங்கள் கேமரா லென்ஸ் வழியாக பதிவு செய்து வந்தவர்கள்.

போர்களின் கொடுமைகள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களின் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை உலகின் பார்வைக்கு கொண்டு வந்ததில் இவர்களின் பங்கு அளப்பரியது.

வரலாற்றின் முக்கியமான தருணங்கள் மறைந்து போகாமல், அடுத்த தலைமுறையினருக்குச் சாட்சியமாக நிலைத்திருக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர்களில் சிலர், தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்த புகைப்படங்கள் வெறும் படங்கள் அல்ல, அவை காலத்தை வென்று நிற்கும் வரலாற்றுச் சான்றுகள்.

சந்தோஷமான தருணங்களை நினைவுகளாக சேமிக்கவும், துக்கமான நிகழ்வுகளை வரலாற்றின் பதிவுகளாக பாதுகாக்கவும், குற்றவியல் வழக்குகளில் உண்மைகளை வெளிக்கொணரும் ஆதாரங்களாகவும் கேமராக்கள் பயன்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், இயற்கையின் அற்புதங்களையும், மனித உணர்வுகளின் பல்வேறு முகங்களையும், சமூக மாற்றங்களையும், காலத்தால் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்யும் சக்திவாய்ந்த கருவியாகவும் கேமரா திகழ்கிறது. ஒரு சாதாரண புகைப்படம் கூட ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் வலிமை கொண்டது என்பதற்கு கேமராவே சிறந்த சான்று. எல்லோருக்கும் எனது கேமரா தின வாழ்த்துகள்.

Article By – RJ INDUJA MANOHARAN