HandShake Day – ஒரு ‘ஷேக்ஹேண்ட்’ உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும்?
தேசிய கைகுலுக்கல் தினத்தை முன்னிட்டு கைகுலுக்களால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கைகுலுக்கல் முறைகள் பற்றி காண்போம் .கை குலுக்கல் (Handshake) என்பது நேர்மை, நம்பிக்கை மற்றும் சமத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய உடல்மொழி (Body Language) ஆகும். கை குலுக்குவது என்பது வெறும் மனிதர்களை வரவேற்கும் முறை மட்டுமல்ல. இதனால் பல உடல்நல மற்றும் சமூக நன்மைகள் ஏற்படுகின்றன.
கைகுலுக்கல் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி, இருவரிடையே பரஸ்பர நம்பிக்கையை உடனடியாக ஏற்படுத்துகிறது.உடலுக்கு மகிழ்ச்சி தரும் ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) ஹார்மோனை சுரக்கச் செய்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனிதர்களுக்குள் இருக்கும் தயக்கத்தை உடைத்து, சமூக உறவை எளிதாகப் பலப்படுத்துகிறது. கைகளை இறுக்கமாகப் பற்றும் போது இருவருக்குள்ளும் ஒரு நேர்மறையான ஆற்றல் பரிமாறப்படுகிறது.
வேலை நேர்காணல் மற்றும் வணிகக் கூட்டங்களில் உங்களின் தொழில்முறைத் திறனை (Professionalism) வெளிப்படுத்துகிறது. ஒருவரின் கை குலுக்கும் வேகத்தை வைத்து அவரின் உடலின் தசை வலிமை மற்றும் ஆற்றலை ஓரளவிற்கு அறியலாம்.
முறையான கை குலுக்கல் எப்படி இருக்க வேண்டும்?
உங்கள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதி (Web), அடுத்தவரின் அதே பகுதியோடு முழுமையாக இணைய வேண்டும். உள்ளங்கைகள் இரண்டும் நேருக்கு நேர் தொட வேண்டும்.
• பிடி தளர்வாகவும் இருக்கக் கூடாது, அதேசமயம் அடுத்தவர் கையை நசுக்குவது போலவும் (Bone crusher) பலமாகவும் இருக்கக் கூடாது. மிதமான உறுதி அவசியம்.
- கை குலுக்கும் போது அடுத்தவரின் கண்களை நேராகப் பார்த்து, முகத்தில் ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்த வேண்டும்.
• கைகளை இணைத்து 2 முதல் 3 முறை மட்டுமே லேசாக மேலும் கீழுமாக அசைத்து (Pumps), 2 முதல் 4 வினாடிகளுக்குள் கையை எடுத்துவிட வேண்டும்
• உட்கார்ந்திருந்தால் எழுந்து நின்று கை குலுக்க வேண்டும். உங்கள் உள்ளங்கை மேல்நோக்கியோ (பணிவு) அல்லது கீழ்நோக்கியோ (ஆதிக்கம்) இல்லாமல், தரைக்குச் செங்குத்தாக நேராக இருக்க வேண்டும்.
உள்ளங்கையை இணைக்காமல், விரல்களின் நுனியை மட்டும் லேசாகப் பிடித்துக் குலுக்குவதை உடல்மொழி நிபுணர்கள் “பிளையர்ஸ்” (Pliers) அல்லது “விரல் பிடி” (Fingers-only handshake) என்று அழைக்கிறார்கள். மக்கள் இப்படிச் செய்வதற்குப் பின்வரும் உளவியல் மற்றும் சூழ்நிலை காரணங்கள் உள்ளன:
சுயநம்பிக்கைக் குறைவு: தங்களைப் பற்றிப் போதிய நம்பிக்கையற்றவர்கள் அல்லது பதற்றமாக (Anxiety/Nervousness) உணருபவர்கள் கையை முழுமையாக நீட்டத் தயங்கி, விரல் நுனியை மட்டும் கொடுப்பார்கள்.
விலகி இருக்கும் எண்ணம் (Distance): அந்த நபருடன் நெருங்கவோ அல்லது சுமுகமான உறவை ஏற்படுத்தவோ விருப்பம் இல்லை என்பதை இது காட்டுகிறது. அவர்கள் தங்களின் “தனிப்பட்ட எல்லையைப்” (Personal Space) பாதுகாக்க நினைக்கிறார்கள்.
• அரைகுறை ஆர்வம் (Uninvolved): கடமைக்காக அல்லது விருப்பமில்லாமல் கை குலுக்கும் போது இத்தகைய தளர்வான விரல் பிடி ஏற்படும்.
• தவறான கணக்கீடு (Missed Handshake): சில நேரங்களில் இருவருக்குள்ளும் இருக்கும் தூரத்தை சரியாகக் கணிக்காமல், அவசரமாகக் கையை நீட்டும் போது உள்ளங்கைகள் இணையாமல் விரல்கள் மட்டும் மாட்டிக்கொள்ளும்.
• கைகளைப் பாதுகாத்தல்: மருத்துவர்கள் (Surgeons), இசைக்கலைஞர்கள் அல்லது ஓவியர்கள் போன்ற தங்கள் கைகளை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டியவர்கள், காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக லேசாக விரல் நுனியை மட்டும் கொடுக்கலாம்
சுருக்கமாகச் சொன்னால்: விரல் நுனியை மட்டும் லேசாகப் பிடிப்பது எதிர்மறையான தாக்கத்தையோ அல்லது ஒருவித தயக்கத்தையோ காட்டும். எனவே, எப்போதும் முழு உள்ளங்கையும் பதியும்படி உறுதியாகக் கை குலுக்குவதே சிறந்தது.
Article By – RJ DAISON

