Specials Stories

பாம்புஎன்றால்படையும்நடுங்குமா? ‘உலகபாம்புகள்தின’ சிறப்புப்பார்வை!

world snake day
world snake day

“பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்ற பழமொழி சிறு வயது முதலே நமது மனங்களில் ஆணித்தரமாகப் பதிந்துவிட்ட ஒன்று. எல்லா பாம்புகளும் விஷம் கொண்டவை, அவற்றைப் பகைத்துக் கொண்டாலோ அல்லது அடித்துக் கொன்றாலோ காலம் கடந்தும், நாடு கடந்தும் நமது இருப்பிடம் தேடி வந்து பழிவாங்கும் என்ற கட்டுக்கதைகளும் நமது பாலிய காலம் தொட்டே செவிவழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், நாம் கேள்விப்பட்டதைப் போல எல்லா பாம்புகளும் விஷம் வாய்ந்தவையா? அவை மனிதர்களுக்கு எதிரானவையா? உலகில் எத்தனை வகையான பாம்புகள் இருக்கின்றன? போன்ற எண்ணற்ற கேள்விகள் நமக்குள்ளே எழுகின்றன.

உண்மையில், நாம் நினைப்பதைப் போன்றோ அல்லது கேட்ட கதைகளைப் போன்றோ பாம்புகள் மனித குலத்திற்கு எதிரானவை அல்ல; எல்லா பாம்புகளும் விஷம் கொண்டவைகளும் அல்ல.

பாம்புகள் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்:

  • வகைகள்: உலகில் கிட்டத்தட்ட 3,000-க்கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. இதில் 600 வகைகள் மட்டுமே விஷம் கொண்டவை. அதிலும் மனிதனைத் தாக்கும் அளவுக்கு வீரியமிக்க விஷம் கொண்டவை வெறும் 200 வகை பாம்புகள் மட்டுமே.
  • வாசனை அறியும் திறன்: பாம்புகள் நம்மைப் போல மூக்கால் வாசனையை நுகர்வதில்லை. மாறாக, தங்களின் பிளவுபட்ட நாக்கின் மூலமே காற்றில் உள்ள துகள்களைச் சேகரித்து வாசனையை உணர்கின்றன. அதனால்தான் அவை அடிக்கடி நாக்கை வெளியே நீட்டி அசைத்துக் கொண்டே இருக்கின்றன.
  • சட்டை உரித்தல்: பாம்புகள் தங்களின் வளர்ச்சி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்காக மாதம் ஒருமுறை உடலின் மேல் தோலை உரிக்கின்றன. இதனை நாம் ‘பாம்பின் சட்டை’ என்று அழைக்கிறோம்.

விவசாயிகளின் நண்பன்:

பாம்புகள் இயற்கையின் சமநிலையைப் பேணப் பெரிதும் உதவுகின்றன. வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகள், எலிகள் போன்ற உயிரினங்களை வேட்டையாடி அழிப்பதன் மூலம் விவசாயிகளுக்குச் சிறந்த நண்பனாக விளங்குகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, பாம்பின் விஷத்தில் இருந்து பல்வேறு கொடிய நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. எந்தெந்த நோய்களுக்கு எப்படியெல்லாம் பாம்பின் விஷத்தைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் உலக அளவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஜூலை 16: உலக பாம்புகள் தினம்

பாம்புகளைப் பற்றிய நமது அறியாமையையும், தேவையற்ற பயத்தையும் போக்குவதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16-ஆம் தேதிஉலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றிலிருந்து ஒரு வாரம் ‘பாம்புகள் வாரமாகவும்’ அனுசரிக்கப்படுகிறது. பாம்புகளும் இந்த பூமியில் வாழத் தகுதியான ஒரு நல்ல ஜீவன்தான் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, நாம் நினைப்பது போல பாம்புகள் மனித குலத்தின் எதிரிகள் அல்ல. பாம்பைக் கண்டால் படைகள் வேண்டுமானால் பயப்படட்டும், நாம் பயப்படத் தேவையில்லை. ஒரு பாம்பைச் சந்திக்கும் போது பதற்றமோ, பரபரப்போ அடையாமல் நாம் நிதானமாக மென்மையாகச் செயல்பட்டாலே, அது தன் இருப்பிடம் நோக்கித் தானாகச் சென்றுவிடும்.

நம்மைத் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் நாம் எடுக்கும் அவசர நடவடிக்கைகளால்தான், பாம்புகள் தற்காப்பிற்காக நம்மை எதிர்க்கத் தொடங்குகின்றன. இந்த உலகத்தில் எல்லா உயிரினங்களுக்கும் நம்மைப் போலவே வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டால், பாம்புகளையும் நாம் நேசிக்கத் தொடங்குவோம்!

Article By – K.S. நாதன்.

About the author

Sakthi Harinath