பாடல் எழுதுவது ஒரு தொழில் அல்ல… அது மனிதர்களின் மனதில் வாழ்வதற்கான ஒரு வழி. அந்த வழியில் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் நா. முத்துக்குமார்.
தமிழ் சினிமாவில் காதல், தாய் பாசம், தந்தையின் அருமை,நட்பு, தனிமை, வாழ்க்கை, தத்துவம், குழந்தைகளின் உலகம் என்று எந்த உணர்வாக இருந்தாலும், அதை மிக எளிய தமிழில், ஆழமான அர்த்தத்துடன் எழுதி இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் நா. முத்துக்குமார். அவருடைய பாடல்களை கேட்கும் ஒவ்வொருவரும், இது நம்ம வாழ்க்கையைத்தான் சொல்லுது என்று உணர்ந்திருப்பார்கள்.
அப்படி நம் மனதில் நீங்கா இடம் பிடித்த நா. முத்துக்குமார் அவர்கள் 12 ஜூலை 1975 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை நாகராஜன் ஒரு தமிழாசிரியர். சிறு வயதிலிருந்தே வீட்டில் இலக்கிய சூழல் இருந்ததால், நா முத்துகுமாருக்கு தமிழ் மீது இயல்பாகவே காதல் ஏற்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, முத்துக்குமார் சிறுவயதிலேயே தனது தாயை இழந்தார். அந்த இழப்பு அவரது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் பின்னாளில் தாயைப் பற்றிய பல பாடல்கள் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தன.
தன் தாயின் இறப்பின் போது குழந்தையாக இருந்த நா முத்துக்குமார் விவரம் அறியாத அந்த வயதில் அம்மாவின் பூத உடலுக்கு அருகில் விளையாடி கொண்டும் கரும்பு சாப்பிட்டு கொண்டும் இருந்தாராம் பின் நாளில் விவரம் தெரிந்து கரும்பு சாப்பிடுவதையே வெறுத்து நிறுத்தி உள்ளார். தான் 3ஆம் வகுப்பு படிக்கும் போதே “சந்தை” என்ற சிறுகதையும் “தூசிகள்” என்ற கவிதையும் எழுதியுள்ளார்.
நன்றாக படிக்கும் நா முத்துக்குமார்
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். Phd படிக்கும் போது தனது ஆய்வுகாக “தமிழ் திரைப்பட பாடல்கள் ஒரு ஆய்வு” என்ற தலைப்பில் லட்சகணக்கான பாடல்களை ஆராய்ச்சி செய்தார்.
பின்னர் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சியும் மேற்கொண்டார். சங்க இலக்கியம் முதல் நவீன கவிதைகள் வரை ஆழமாகப் படித்தவர். தமிழ் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலமே அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.
நா முத்துக்குமார் எழுதிய “தூர்” என்ற கவிதையை எழுத்தாளர் சுஜாதா பெருமையாக ஒரு மேடையில் பேசியிருப்பார்.
முத்துக்குமாரின் “பட்டாம்பூச்சி விற்பவன்” என்ற கவிதையை படித்த இயக்குனர் சீமான் தான் இயக்கிய “வீரநடை” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா,ஏ. ஆர். ரஹ்மான்,யுவன் ஷங்கர் ராஜா,ஹாரிஸ் ஜெயராஜ்,ஜி. வி. பிரகாஷ்,டி. இமான் ஆகியோருடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய வரிகள் கவிதையாக மட்டும் இல்லாமல், பலரின் வாழ்க்கை அனுபவங்களாக மாறின.
1. “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” – தங்க மீன்கள் திரைப்படத்திற்காக,
தந்தை – மகள் பாசத்தை உலகமே கொண்டாட வைத்த பாடல்.
2. “அழகே அழகே” – சைவம் திறப்படத்திற்காக,
வாழ்க்கையின் அழகை மிகவும் மென்மையாகச் சொன்ன பாடல்.
இந்த பாடல்களுக்காக தேசிய விருதையும் பெற்றார் .
அவர் எழுதிய பாடல்களில் மறக்க மறக்க முடியாத பாடல்களாக வெயிலோடு விளையாடி,சுட்டும் விழிச்சுடரே,ஒரு தெய்வம் தந்த பூவே,கண் பேசும் வார்த்தைகள்,முன் பனியா,பூக்கள் பூக்கும் தருணம்,பேசுகிறேன் பேசுகிறேன்,உனக்கென்ன வேணும் சொல்லு இப்படி அவரின் Super Hit பாடல்களை வரிசைபடுத்தி கொண்டே போகலாம்.
ஒவ்வொரு பாடலிலும் ஒரு வாழ்க்கை, ஒரு உணர்வு, ஒரு நினைவு இருக்கிறது.
நா. முத்துக்குமாரின் சில வரிகள் நமக்கு காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பொன்மொழிகளாக அமைத்தன அவைகளில்
நம் மனதில் ஆழ பதிந்தவைகள்;
1.“அன்பு இருக்கும் இடத்தில் வாழ்க்கை அழகாகிறது.”
2.“வாழ்க்கை என்பது வெற்றியை மட்டும் தேடுவது அல்ல; மனிதர்களை சம்பாதிப்பதுதான்.”
3.“மனிதன் அழுவதால் பலவீனமாக மாறுவதில்லை; மனதை சுத்தப்படுத்திக் கொள்கிறான்.”
4.“காதல் என்பது ஒருவரை மாற்றுவது அல்ல; அவரை முழுமையாக ஏற்றுக்கொள்வது.”
5.“குழந்தைகள் நமக்கு வாழ்க்கையை மீண்டும் கற்றுத் தரும் ஆசிரியர்கள்.”
இந்த பொன்மொழிகள் அனைத்தும் நம் வாழ்வோடு இணைந்த ஓர் அற்புதமான வரிகளாக விட்டு சென்றுள்ளார்.
1500-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதி இருப்பதோடு மட்டும் இல்லாமல் பல கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்த முத்துக்குமார் இளம் தலைமுறைக்கு வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவித்தவர்,தனது சொந்த வாழ்கையில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்,தான் எழுதும் பாடல்களில் பெரும்பாலும் தூய தமிழ் சொற்களை பயன்படுத்த விரும்பியவர். பயணங்களின் காதலனாக இருந்த நா முத்துக்குமார் தன்னை பாடலாசிரியர் என்று சொல்வதை விடவும் கவிஞர் என்று சொல்லிக்கொள்ளவே ஆசை கொண்டிருந்தார்.
நடிகர் சூரியா நடித்த ஆதவன் படத்திற்காக தன்னுடைய 1000மாவது பாடலை எழுதினார்.
முத்துக்குமார் மகனின் பெயரும் ஆதவன் தான்.
தன்னுடைய மகனுக்காக முத்துக்குமார் எழுதிய கடிதம் 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது.
இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்த நா முத்துக்குமார் ஆகஸ்ட் 2016 அன்று, வெறும் 41 வயதிலேயே, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
ஆம்!
அவர் மறைந்தாலும், அவர் எழுதிய பாடல்கள் இன்னும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் உயிருடன் வாழ்கின்றன.
தமிழ் சினிமாவில் பல சிறந்த பாடலாசிரியர்கள் இருந்தாலும், நா. முத்துக்குமாரின் தனித்துவம் அவரது எளிமையில் இருந்தது.
அவர் எழுதிய பாடல்களில் பெரிய வார்த்தைகள் இல்லை. ஆனால், பெரிய உணர்வுகள் இருந்தன. அவரது வரிகள் காதலர்களுக்கு காதலாகவும், குழந்தைகளுக்கு சிரிப்பாகவும், பெற்றோருக்கு கண்ணீராகவும், வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கு நம்பிக்கையாகவும் மாறின.
நிறைவாக…
நான் சொல்லிக்கொள்ள விரும்புவது , “ஒரு கவிஞர் உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, மறைந்த பிறகும் அவர் எழுதிய வரிகளை மக்கள் முணுமுணுக்கும் வரை அந்த கவிஞர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.”
அந்த வகையில், நா. முத்துக்குமார் இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது பாடல்கள் ஒவ்வொரு நாளும் வானொலியில் ஒலிக்கின்றன, நம் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் ஆள்கின்றன!
கவிதை எழுத பலர் வந்தார்கள் ஆனால் வாழ்க்கையையே கவிதையாக எழுதியவர் நா. முத்துக்குமார்.!

