Cinema News Stories

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்!

14 வருடங்களாகியும் மாஸ் காட்டும் சிங்கம்..! கிளாஸ் ஹீரோவாக இருந்த சூர்யாவை மாஸ் ஹீரோவாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஹரி. தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் மசாலா திரைப்படமாகவும், போலீஸ் பற்றி பெருமை பேசிய படமாகவும் சூர்யா – ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் படம் உள்ளது.

சூர்யாவுக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்து தந்த இந்த படத்தின் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளால் படத்தின் மேக்கிங் வெகுவாக பேசப்பட்டது. சிங்கம் படத்துக்கு முன்னரே பல படங்களில் சூர்யா ஆக்‌ஷன் வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் இவர் பேசும் பஞ்ச் வசனங்கள், போலீஸ் கதாபாத்திரத்தில் இருந்த பெர்பெக்‌ஷன் போன்றவை அவருக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை தந்தது.

அருவா போன்ற தோற்றத்தில் இருக்கும் சூர்யாவின் மீசை அப்போது இளைஞர்கள், ஆண்கள் மத்தியில் ட்ரெண்டானது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களில் சிங்கம் சீரிஸ் படங்களுக்கு தனியொரு இடம்முண்டு. இந்த சிங்கம் சீரிஸ் உருவாவதற்காக காரணமாக இருந்தது இதன் முதல் பாகமான சிங்கம் படம் பெற்ற வெற்றியும் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் தான்.

ஆறு, வேல் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா – ஹரி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த படம் சிங்கம். ஆறு படத்தில் சென்னையை சேர்ந்த லோக்கல் ஹீரோவாகவும், வேல் படத்தில் டிடெக்டிவ் மற்றும் வில்லேஜ் ஹீரோவாக டபுள் ஆக்டிங்கில் சூர்யாவை மாறுபட்ட பரிணாமத்திலும் காட்டியிருப்பார். ஆனால் சிங்கம் படத்தில் இவை இரண்டிலும் இருந்து வித்தியாசமாக அதிரடியான போலீஸ் ஆபிசராக மிடுக்கான தோற்றம், கூரான மீசை லுக், கம்பீர பேச்சு என மாஸ் ஹீரோவாக காட்சிப்படுத்தியிருப்பார்.

சிங்கம் படத்தின் கதையும், அதன் விறுவிறுப்பான திரைக்கதையும் அனைவருக்கும் தெரிந்து விஷயம் தான். அந்த படத்தின் க்ளைமாக்ஸில் வருவது போல் தூத்துக்குடி நல்லூரில் தொடங்கி, ஆந்திரா நெல்லூர் வரை படம் முழுவதும் பரபரப்பு காட்சிகள், பைட், சேஸிங் எனவும், தேவைப்படும் இடத்தில் காதல், செண்டிமெண்ட், துள்ளலான பாடல் காட்சிகள் எனவும் நல்ல மாஸ் மசாலா திரைப்படமாக அமைந்திருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரசிக்கும் விதமாக படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் இடம்பிடித்திருக்கும். ரேஸ் வேகத்தில் செல்லும் திரைக்கதை, தனித்துவமான ஆக்‌ஷன் காட்சிகள் போன்றவை படத்தை தனித்துவமாக காட்டும் விஷயமாக இருந்தன. ஆக்‌ஷன் காட்சிகளால் படத்தின் மேக்கிங் வெகுவாக பேசப்பட்டது.

கோடை விடுமுறை முடிவதற்கு முன்பு மே 28ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் படம் வெளியாகி, விடுமுறை தின ட்ரீட்டாக இந்த படம் ரசிகர்களுக்கு அமைந்தது. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் இந்தி, வங்காளம், பஞ்சாபி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டடித்தது.

நேர்மையான போலீஸ் கதாபாத்திரத்தை பின்னணியாக வைத்து, வில்லன்கள் வேட்டையாடும் கதையம்சத்தில் காவல்துறை பற்றி பெருமை பேசும் விதமாக தமிழ் சினிமாவில் உருவான சிறந்த படமாக இருந்து வரும் சிங்கம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பாட்ஷா படமென்றால், சூர்யாவிற்கு ஒரு சிங்கம் படம் எந்த காலகட்டத்திலும் பார்த்து ரசிக்ககூடிய சிறந்த மசாலா படமாக உள்ளது.

Article By RJ Kannan

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.