Specials Stories

உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்! | World Blood Donar Day

World Blood Donar Day
World Blood Donar Day

(உலக ரத்ததான தினம்: ஜூன் 14)

இதுவரை எந்த அறிவியலினாலும் கண்டுபிடிக்க முடியாத, செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத ஒரே ஒரு பொருள் ரத்தம்தான். மனித சக்தியால் மாற்று கண்டுபிடிக்க முடியாத, மனிதனை வாழவைக்கும் உன்னதமான ஜீவநாடி இது.விபத்து காரணமாகவோ அல்லது கடுமையான நோய் பாதிப்பு காரணமாகவோ மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு நபர், மீண்டும் உயிர் பிழைத்து வாழ பிறரின் ரத்தம் தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான கட்டத்தில், ஒருவர் தனது உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்தை மற்றவருக்குத் தானமாகத் தருவதே ரத்ததானம் ஆகும்.

“நாம் ரத்தம் கொடுக்க எடுத்துக்கொள்ளும் சில நிமிடங்கள், ஒரு குடும்பத்தின் வாழ்நாள் மகிழ்ச்சியைக் காப்பாற்றும்!” நாம் வழங்கும் ஒரு யூனிட் ரத்தம், விபத்து மற்றும் அறுவை சிகிச்சை போன்ற அவசரக் காலங்களில் மூன்று பேரின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். உயிர் காக்கும் மருத்துவத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நாம் அனைவரும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்ய வேண்டும். பல்வேறு தன்னார்வலர்கள் மூலம் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேவைப்படும்போது நோயாளிகளுக்குச் செலுத்தப்படுகிறது.

உலக ரத்ததான தினம் ஏன்?

பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தப் பொருட்களின் தேவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னார்வமாக ரத்ததானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஜூன் 14 ஆம் தேதியை உலக ரத்ததான தினமாக அறிவித்துள்ளது. ரத்த வகைகளைக் (ABO Blood Group) கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த நாளான ஜூன் 14 ஆம் தேதியை, 2005 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் இந்த தினமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டிற்கான உலக ரத்ததான தினத்தின் கருப்பொருள்: “மனிதகுலத்தின் ஒரு துளி. ரத்தத்தைக் கொடுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்.”

இந்தியாவில் ரத்தத்தின் தேவை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.46 கோடி (14.6 மில்லியன்) யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒருமுறை இங்கு ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. மனித வாழ்க்கையில் ரத்தத்தை விட உயரிய பரிசு எதுவும் இருக்க முடியாது.

ரத்ததானம் செய்ய தகுதிகள் என்னென்ன?

• வயது: 18 வயது நிறைந்தவராகவும், 60 வயதைத் தாண்டாதவராகவும் இருத்தல் அவசியம்.
• எடை: ரத்ததானம் செய்பவரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
• ஹீமோகுளோபின் அளவு: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
• பாலினம்: ஆண், பெண் இருபாலரும் ரத்ததானம் செய்யத் தகுதியுடையவர்கள்.
• இடைவெளி: ரத்ததானம் தொடர்ச்சியாகச் செய்ய விரும்புபவர்கள், குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே அடுத்த முறை ரத்ததானம் செய்ய வேண்டும்.

ரத்ததானம் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:

ரத்ததானம் செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் மேம்படுவதற்கும் உதவுகிறது.

  1. புதிய ரத்தம் உருவாதல்: ரத்ததானம் செய்வது இயற்கையாகவே புதிய ரத்தம் உடலில் ஊறுவதற்குச் சமமாகும்.
  2. மாரடைப்பு அபாயம் குறைதல்: தற்போதைய பல்வேறு ஆய்வுகளில், தொடர்ச்சியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  3. ஹீமோகுளோபின் பராமரிப்பு: உடலில் ஹீமோகுளோபின் (Hemoglobin) அளவைக் கட்டுப்படுத்தவும், சமச்சீராகப் பராமரிக்கவும் ரத்ததானம் பயன்படுகிறது.
  4. ரத்த அழுத்தம் சீராகுதல்: ரத்ததானம் செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் (Blood Pressure) சீராகப் பராமரிக்கப்படுகிறது. அதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.

“ஜாதி, மதம் பார்க்காமல் உயிர்களை இணைக்கும் ஒரே அமிர்தம் ரத்ததானம்!”

“ரத்ததானம் செய்வோம்; மரணத்தின் விளிம்பில் உள்ள உயிரை மீட்டெடுப்போம்!”

உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்!!

Article By – என். செல்வராஜ், கோவை

About the author

Sakthi Harinath