கன்னியாகுமாரி மாவட்டம் பல அதிசயங்களை உள்ளடக்கியது. அது கடற்கரைகளுக்கு மட்டும் பெயர் போனவை அல்ல பல அழகிய மலைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் அடங்கும். இதில் சில மலைகள் இதிகாசங்களிலும் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று தான் மருந்துவாழ் மலை, இதனை மருத்துவா மலை என்றும் அழைப்பர்.
இது நாகர்கோவிலிலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் கன்னியாகுமாரி போகும் பாதையில் அமைந்துள்ளது. போகும் பாதை எங்கும் கண்கவர் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காணலாம். அதிகாலை சென்றால் பனி படர்ந்த மலை காட்சிகளை காண இயலும். வார இறுதிநாட்களில் பொழுது போக்குவதுற்கு இது ஒரு சிறந்த இடம்.
ட்ரெக்கிங் செய்யவும் ஒரு ஏற்ற இடமாக இது திகழ்கிறது. இது ஒரு புனிதமான மலையாக ஊர் மக்களிடையே கருதப்படுகிறது. இந்த மலையில் பல அரியவகை உயிர் காக்கும் மருந்துகள் காணப்படுவதாக மக்களால் நம்பப்படுகின்றது. இதன் காரணமாக தான் இந்த மலைக்கு மருந்துவாழ் மலை என்று பெயர் வந்தது. மலையேறும் பாதையில் பல தெய்வ சிற்பங்களை காண இயலும், அவை பாறைகளில் செதுக்கப்பட்டு இருக்கும்.
மக்களால் நம்பப்படும் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த மலை சஞ்சீவி மலையின் ஒரு பாகம் என்றும், ஆஞ்சநேயர் மகேந்திரகிரியில் இருந்து இலங்கைக்கு சஞ்சீவி மலையை எடுத்து செல்லும்போது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. மலையேறும் போது ஓர் சிறிய சிவன் கோவிலும் உள்ளது. அக்கம்பக்கத்திலுள்ள ஊர்களை சேர்ந்தர்வர்கள் இங்கு வந்து வழிபடுவதும் உண்டு.

மருந்துவாழ் மலை ஒரு அதிசயம் என்றே சொல்ல வேண்டும், ஏனென்றால் நீங்கள் மேலே முன்னேறி செல்ல செல்ல உடல் சோர்வாகும் இருப்பினும் அந்த எழில் கொஞ்சும் அழகை காணும் போது மனம் புத்துணர்வடைந்து சக்தி கொடுக்கும். அவ்வப்போது இத்தகைய ட்ரெக்கிங் செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்ததாகவும் ஆகும்.
வெளியுலகிலிருந்து ஒரு பிரேக் எடுத்து இயற்கையின் அழகில் நேரம் செலவிட இது ஒரு அருமையான இடம் என்று தான் கூற வேண்டும். இந்த மலையின் அடிவாரத்தில் மட்டுமே உங்களால் படிக்கற்களை பார்க்க முடியும், அதன் பின் பாறைகளின் மேலும் மண் பாதையிலும் தான் செல்ல வேண்டியிருக்கும்.

போகும் வழிநெடுகிலும் குப்பைத்தொட்டிகள் வைத்திருப்பதையும் நீங்கள் காண இயலும். இதன் மூலம் தூய்மையும், சுத்தமும் உறுதி செய்யப்படுகின்றது. மேலே செல்ல செல்ல அருகில் இருக்கும் கடற்கரையை காண கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஸ்ரீபாதஸ்ரீவல்லபச்சரித்திராமரித்தம் எனும் புத்தகத்தில் மருந்துவாழ்மலை குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மலை உச்சியில் பிள்ளைத்தடம் குகை அமைந்துள்ளது. இங்கு தான் குரு நாராயணா பல ஆண்டுகளாக தவம் செய்ததாக நம்பப்படுகின்றது.

இங்கு அகஸ்திய குகை என்று இன்னொரு குகையும் உள்ளது. இந்த இரண்டு குகைகள் போக ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவிலும் மலை உச்சியில் காணப்படுகின்றது. மருந்துவாழ்மலையில் சிவா, அகஸ்திய, ராமா, சீதா, ஹனுமான், பாலர், தேவேந்திரன், ப்ரம்மா மற்றும் காளிதாசன் ஆகிய 9 தீர்த்தனைகள் உள்ளன.
மலையுச்சியில் இருந்து மணக்குடி ஏரி, எமரால்டு நெல் வயல் போன்றவற்றை நம்மால் காண இயலும். இதை தவிர்த்து கடற்கரை பகுதியான லீபுரம் முதல் முட்டம் வரை நம்மால் மேலிருந்து காண இயலும். கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க மருந்துவாழ் மலையை நம் வாழ்வில் ஒருமுறையேனும் கண்டு ரசிக்க வேண்டும்.