Cinema News Stories

SPB: குரலின் வரலாறு

SPB: குரலின் வரலாறு
SPB: குரலின் வரலாறு

வானம்பாடி குரலால் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த இசை உலகின் அதிசயம் S. P.பாலசுப்ரமணியம்..!

இந்திய திரையிசை வரலாற்றில் சில குரல்கள் காலத்தைத் தாண்டி வாழ்கின்றன. அந்த வரிசையில் முதல் இடங்களில் ஒலிப்பது எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் தான்.! ஒரு பாடகராக மட்டுமல்லாமல், உணர்வுகளை இசையாக மாற்றிய கலைஞராகவும் அவர் நினைவு கூறப்படுகிறார். இன்ஜினியராக ஆக வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருந்தது. ஆம்.!

SPB-யின் முதல் கனவு பாடகர் ஆவது அல்ல. அவர் இன்ஜினியரிங் படித்து பொறியாளராக வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் இசை அவரை வேறு பாதைக்கு அழைத்துச் சென்றது.ஒரு பாடல் போட்டியில் SPB வென்றபோது, நீதிபதிகளில் ஒருவராக இருந்த S. P. Kodandapani அவரது திறமையை கண்டு திரைப்படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். SPB முறையாக கர்நாடக இசை பயிற்சி பெறவில்லை. ஆனால் இயற்கையாகவே கிடைத்த குரல் வளமும், உச்சரிப்புத் திறனும், அர்ப்பணிப்பும் அவரை இந்தியாவின் தலைசிறந்த பாடகராக உயர்த்தின.

16க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடிய சாதனையாளரும் கூட, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, துளு, ஒரியா உள்ளிட்ட பல மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். உலகிலேயே அதிக பாடல்களைப் பாடிய கலைஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.SPB பாடிய முதல் திரைப்படப் பாடல்,தெலுங்குத் திரைப்படமான Sri Sri Sri Maryada Ramanna படத்திற்காக பதிவு செய்யப்பட்டது. அங்கே தொடங்கிய அவரது பயணம் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது.

SPB-க்கு இசை நோட்டேஷன் (staff notation) முழுமையாகப் படிக்கத் தெரியாது என்று அவரே சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆனால் ஒருமுறை மெட்டை கேட்டாலே அதை நினைவில் வைத்து பாடும் அபார திறன் அவருக்கு இருந்தது. இது இசை உலகில் மிகவும் அரிதான திறமையாக கருதப்படுகிறது. சில காமெடி பாடல்களில் சிரிப்பு, குறும்புத்தனம், குரல் modulation போன்றவற்றை இயல்பாகக் கொண்டுவர பலமுறை முயற்சி செய்துள்ளார். “சிரிப்பும் ஒரு இசை” என்று அவர் கூறுவார்.

1981-ஆம் ஆண்டு கன்னட மொழியில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பதிவு செய்து சாதனை படைத்தார். இது அவரது குரல் சக்தியையும் உழைப்பையும் காட்டுகிறது. M. S. Viswanathan முதல் Ilaiyaraaja, A. R. Rahman வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வெற்றிப் பாடல்களை வழங்கியுள்ளார். Ilaiyaraaja – SPB கூட்டணி இந்திய திரைப்பட இசை வரலாற்றின் மிக வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

A. R. Rahman இசையில் உருவான சில பாடல்களை SPB பாட திட்டமிடப்பட்டிருந்தாலும், கால அட்டவணை காரணங்களால் சில வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் ரஹ்மானின் பல மறக்க முடியாத பாடல்களையும் அவர் பாடினார். Rajinikanth, Kamal Haasan, Salman Khan உள்ளிட்ட பல நடிகர்களுக்கு அவரது குரல் அப்படியே பொருந்தியது. திரையில் நடிகர் பேசுகிறாரா அல்லது SPB பாடுகிறாரா என்ற வித்தியாசம் தெரியாத அளவுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

பொதுவாக பல பாடகர்கள் ஐஸ் வாட்டர், குளிர்பானம் போன்றவற்றைத் தவிர்ப்பார்கள். ஆனால் SPB தனது குரலை இயல்பாகவே பராமரித்தார். அதுவே அவரது குரலின் இயற்கை வலிமை. 1980–2000 காலகட்டத்தில், காதல் என்றால் SPB குரல்.! சோகம் என்றால் SPB குரல்.! நட்பு என்றால் SPB குரல்.! என்று ரசிகர்கள் உணர்ந்தனர். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றுள்ளார். பல மொழிகளில் இதே சாதனையை நிகழ்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமா.?

தொகுப்பாளராகவும் ரசிகர்களின் மனதில் நின்றார் “பாடுதா தீயகா” போன்ற இசை நிகழ்ச்சிகள் மூலம் இளம் பாடகர்களை ஊக்குவித்தார். போட்டியாளர்களை விமர்சிக்காமல் வழிகாட்டும் அவரது அணுகுமுறை அனைவரையும் ஈர்த்தது. புகழின் உச்சியில் இருந்தபோதும் எளிமையை இழக்கவில்லை. ஸ்டுடியோவில் அனைவருடனும் நண்பரைப் போல பழகியவர்.
காதல், சோகம், உற்சாகம், பக்தி, காமெடி என எந்த உணர்வாக இருந்தாலும் அதற்கேற்ற குரல் நிறத்தை உருவாக்கும் திறன் அவரிடம் இருந்தது. அதனால்தான் அவரது பாடல்கள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன.

SPB தனது ரசிகர்களிடம் அடிக்கடி சொல்வது என்னை நினைவில் வைத்திருக்க வேண்டாம் நான் பாடிய பாடல்களை நினைவில் வைத்திருந்தால் போதும். இந்த மனப்பான்மையே அவரை ஒரு பெரிய கலைஞராக மட்டுமல்ல, பெரிய மனிதராகவும் உயர்த்தியது. 2020-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோதும், அவரது குரல் இன்னும் ஆயிரக்கணக்கான வானொலிகளில், இசைத் தளங்களில், ரசிகர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு தலைமுறை காதலிக்க கற்றுக்கொண்டது SPBயின் குரலைக் கேட்டு..!
ஒரு தலைமுறை துயரத்தை மறந்தது SPBயின் பாடலைக் கேட்டு..!
ஒரு வரியில் சொல்லப்போனால் SPB
பாடல்களைப் பாடியவர் அல்ல பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர்..!

உண்மையில் தேகம் மறைந்தாலும் இசையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் வானம்பாடி S.P.பாலசுப்ரமணியம்..!

Article by – RJ KESAV