ஒரு நாள் தண்ணீர் இல்லாம இருந்தா என்ன ஆகும்? ஒரு நாள் காற்று முழுசா மாசடைஞ்சா என்ன ஆகும்? ஒரு நாள் மரங்கள் எதுவுமே இல்லாம போயிட்டா என்ன ஆகும்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நாம யோசிக்கணும் அப்படிங்கிறதுக்காகத்தான் ஒவ்வொரு வருஷமும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுறோம்.
நாம் தினமும் சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், நிழல் தர மரங்கள், உணவு தர இயற்கை – இதெல்லாமே நமக்கு இலவசமா கிடைச்ச மிகப்பெரிய வரங்கள். ஆனா வளர்ச்சி என்ற பெயர்ல நாம இயற்கைய கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றோம். மரங்கள் குறைஞ்சுக்கிட்டே இருக்கு, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு, நீர்நிலைகள் மாசடைஞ்சுக்கிட்டே இருக்கு. இதன் விளைவா பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு.
இந்த மாதிரியான சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பத்தி மக்கள் கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துறதும், இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவது தான் உலக சுற்றுச்சூழல் தினத்தோட முக்கிய நோக்கம். காடுகளை பாதுகாக்கணும், மரங்களை வளர்க்கணும், நீர்நிலைகளை தூய்மையா வச்சுக்கணும் போன்ற விஷயங்கள்ல மக்கள் அதிகமா ஈடுபடணும் அப்படின்னு வலியுறுத்துற நாள்தான் இந்த நாள்.
சுற்றுச்சூழலை பாதுகாக்குறது பெரிய விஷயம் இல்ல. நம்மால முடிஞ்ச சின்ன சின்ன முயற்சிகளை எடுத்தாலே போதும். நம்ம வீட்டுக்கு பக்கத்துல மரம் நடலாம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம், மின்சாரத்தையும் தண்ணீரையும் சிக்கனமா பயன்படுத்தலாம், மறுசுழற்சி முறைகளைப் பின்பற்றலாம்.
நம்ம வாழ்க்கைக்கு காற்றும், தண்ணீரும், மரங்களும் எவ்வளவு முக்கியமோ, அத பாதுகாக்குறதும் அவ்வளவு முக்கியம். இந்த நாள்ல என்னோட சின்ன வேண்டுகோள் என்னனா, தயவு செஞ்சு ஒவ்வொருத்தரும் ஒரு மரமாவது நடுங்க. உங்க கண்ணுக்கு தெரியுற குப்பைகளை குப்பைத்தொட்டியில போடுங்க. நெகிழி பயன்பாட்டைக் குறைச்சு, முடிஞ்ச அளவுக்கு துணிப் பைகளை பயன்படுத்த முயற்சி பண்ணுங்க. தனி மனிதரா இருந்தா எல்லாத்தையும் மாற்ற முடியாது. ஆனா தனி மனிதர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா கண்டிப்பா ஒரு பெரிய, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்.
இயற்கையை நேசிப்போம்… சுற்றுச்சூழலை காப்போம்… பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்!
Article By – RJ Sandhiya

