Cinema News Stories

10 Years of ’குக்கூ’

விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ரசிகர்களிடமிருந்து சில எதார்த்த படங்களைப் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட மனதை உருக்கும் எதார்த்த திரைப்படங்களில் ஒன்றுதான் குக்கூ.

இந்த படத்தின் பெயரைச் சொன்னால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அறிமுக இயக்குநராக ராஜு முருகன் இந்த திரைப்படத்தில் ஆழமான கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை நடிக்க வைத்திருப்பார். இல்லை, செதுக்கி இருப்பார் எனக் கூறலாம்.

கண்கள் தெரியாத இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே ஏற்படும் காதல் தான் இந்த திரைப்படத்தின் அடித்தளம். கேட்கும் போதே ஆர்வத்தைத் தூண்டுகிறதா? அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் தனது கைதேர்ந்த நடிப்பை எதார்த்தமாகக் காட்டி இருப்பார்.

அறிமுக நாயகியான மாளவிகா நாயரும் கண் தெரியாத பெண்ணாக மிக எதார்த்தமாக நடித்திருப்பார். இருவரும் கண்கள் தெரியாமல் தங்களது காதலை பரிமாறிக் கொள்ளும் விதம் பார்ப்பவர்களை மயக்கும் அளவிற்கு இருந்தது. இந்த படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் என்னவென்றால், வேறு என்ன சந்தோஷ் நாராயணன் இசைதான்

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய மூன்று படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த படங்களைப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் மனம் பட்ட பாடு. அந்த அளவிற்கு ஆழ்மனதையும், உறங்கிக் கொண்டிருக்கும் நமது சிந்தனையையும் தட்டி எழுப்பும் வகையில் இந்த படங்கள் எடுக்கப்பட்டிருக்கும்.

இவரது ஜோக்கர் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குக்கூ திரைப்படத்தில் நடித்திருந்த மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து நடிகர்களும் தங்களது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

இயக்குநர் எந்த அளவிற்கு வேலை வாங்கினாலும் தன்னிடம் திறமை இல்லாமல் அதனை வெளிப்படுத்த முடியாது என்பதை குறிக்கும் வகையில் ஒரு சிறந்த நடிப்புக்கான ஆதாரத்தை அந்த நடிகர்கள் வெளிப்படுத்தி இருப்பார்கள். இதுவே இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு.

இன்றுடன் குக்கூ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளாகின்றன. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் தாக்கத்தைப் பொறுத்தே மீண்டும் மீண்டும் அது நினைவு கூறப்படும். அந்த வகையில் குக்கூ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கமே தற்போது நம்மை நினைவு கூற வைத்திருக்கிறது. அழியா காதல் எங்கும் நிறைந்திருக்கும் என்பதே இந்த அழியாத காவியத்தின் நினைவாகும்.

Article By RJ Jebaraj