Specials Stories

“கடவுளின் குழந்தைகள்”

இந்த உலகத்துல பிறந்து நிறைய சவால்கள எதிர்கொள்றவங்க பலர், பிறக்கும்போதே சவால்கள சந்திக்குறவங்களும் இருக்காங்க, அப்படி பிறப்பிலேயே கருவிலேயே சவால்கள சந்திக்குறவங்கள கடவுளின் குழந்தைகள்னு சொல்லலாம்.

ஆணின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து தான் ஒரு கருவை உண்டாக்குகின்றன. இந்த குரோமோசோம் ஜோடிகளில் 21வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக வயி்ற்றில் வளரும் கருவில் ‘டவுன் சிண்ட்ரோம்’ எனப்படும் மூளை வளர்ச்சியின்மை ஏற்படுகிறது. இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்பத்திலேயே கருவுக்கு ‘டவுன் சிண்ட்ரோம்’ உள்ளதா? என்பதை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் வித்தியாசமான உடலமைப்புடன் இருப்பார்கள்; சிலரின் உயரம் குறைவாக இருக்கும்; பார்த்தாலே ஏதோ ஓர் உடல் குறைபாடு தெரியும். இதுபோன்ற உடல் குறைபாடுகள் டவுன் சிண்ட்ரோம் வந்தவர்களுக்குத் தவிர்க்க முடியாதவை.

இவர்களைப் பார்த்தால் சிலருக்கு கேலி செய்யத் தோன்றும். சிலர் இரக்கப்படுவார்கள். எங்கே போனாலும், மற்றவர்களின் பார்வை இவர்களை வெறித்தபடியே இருக்கும். உண்மையில், இவர்கள் நம்மைவிடத் திறமைசாலிகள்; அதிக நற்பண்புகளைக் கொண்டவர்கள்; நம்மைவிட பிறருக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள்; நம்மைவிட வேலையில் கெட்டிக்காரர்கள் , அசாத்திய திறமை கொண்டவர்கள்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 32,000 குழந்தைகள் ‘டவுன் சின்ட்ரோம்’ பாதிப்புடன் பிறக்கின்றனர். அதாவது, இங்கே பிறக்கும் 800 குழந்தைகளில் ஒருவருக்கு ‘டவுன் சின்ட்ரோம்’ இருக்கிறது. இது அமெரிக்காவில் பிறக்கும் ‘டவுன் சின்ட்ரோம்’ குழந்தைகளின் எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகம்னு ஒரு ஆய்வு சொல்லுது.

மாசடைந்த சுற்றுச் சூழல், மாறி வரும் உணவுப்பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவு மன அழுத்தம், உறக்கம் குறைவு, உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, அதிகரித்து வரும் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற நவீன வாழ்க்கைமுறை மாற்றங்கள் ‘டவுன் சின்ட்ரோம்’ குழந்தைகள் பிறப்பதற்கு காரணம்.

இந்த பாதிப்புள்ள குழந்தைகள் எந்த பெற்றோருக்கும் பிறக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்கு மேல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கே ‘டவுன் சின்ட்ரோம்’ குழந்தைகள் பிறக்க சாத்தியம் அதிகம். அதேநேரம், மிகவும் குறைந்த வயதில் திருமணம் செய்துகொண்டு அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் ‘டவுன் சின்ட்ரோம்’ குழந்தைகள் பிறக்க சாத்தியம் உண்டு.

ஆனால் இது பரம்பரையாக ஏற்படுவதில்லை. கருவுற்ற மூன்றாவது மாதத்திலயேவ் Down syndrome குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் . டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலின் அமைப்புகளைப் பாதிக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படலாம். கண்களில் புரை, கேட்டல் திறன் குறைபாடு, முக அமைப்பில் மாற்றம், இதய நோய்கள், குடலில் குறைபாடு, தைராய்டு குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு… இவையெல்லாம் ஏற்படலாம்.

ஒரு குழந்தைக்கு இந்த பிரச்னை இருப்பதை கண்டறிந்தால், உடனே பல பரிசோதனைகளை செய்து, குழந்தைக்கு என்ன குறைபாடு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும். கண், காது, இதயம் ஆகியவற்றில் பிரச்னையிருந்தால், தைராய்டு குறைபாடு இருந்தால் சிறு வயதிலேயே கண்டறிந்து சரி செய்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த குழந்தைகளாலும் மற்றவர்களை போல இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கமான கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல் மூலம் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பிறக்கும் போது ECHO, இதய ஆய்வு மற்றும் அதன் பிறகு தொடர்ச்சியாக குழந்தையின் இதய செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்.

சுவாசம், குறட்டை மற்றும் மீண்டும் மீண்டும் வரும் காது தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் தவறாமல் கண்காணிக்க வேண்டும் மற்றும் மருத்துவரை அணுக வேண்டும். தங்கள் குழந்தையின் motor delay மற்றும் சமூக திறன் மேம்பாடு ஆகியவற்றை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மருத்துவரை பின்தொடர வேண்டும்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளும் மற்ற குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். மற்றவர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தொழில் செய்கிறார்கள், காதல் திருமணம் என 60 வயது வரை நிறைவாய் வாழ்கிறார்கள். குரங்கு கூட்டத்துடன் வளர்பவனின் தன்மை குரங்கைப்போலத்தான் இருக்கும். அதுபோல அறிவாளிகளுடன் போட்டி போட்டால்தான் அறிவாளியாக முடியும்.

இவர்களைப் பிரித்து வைக்காமல், மற்ற குழந்தைகளோடு வளர விட இந்த சமுதாயம் வழி செய்ய வேண்டும் . இந்த March 21 உலக “Down Syndrome ” தினத்தில் இதை பற்றின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். “இந்த உலகம் எல்லாருக்குமானது”.

Article By RJ Dharshini