Specials Stories

விவசாயிகளின் பாதுகாவலன்!

2010 இதே நாளில் தான் இந்த தினம் துவக்கப்பட்டது. 15 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நாளில், அழிந்து வரும் ஓர் இனம் காக்கப்பட வேண்டும், அதை மீட்டெடுக்கப்பட வேண்டும், அதன் பயன்பாடு மனிதனுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தினம் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றது. அப்படி யாருக்கான தினமாக இன்றைய தினம் இருக்கிறது என்றால்? கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்!

நமது வீடுகளில் கூரைகளின் மேல் கூடுகளை அமைத்துக் கொண்டு கீச் கீச் என்ற சத்தத்துடன் தனது குழந்தைகளுடன் குடும்பங்களாக பறந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு உயிரினத்தின் பெயர் “சிட்டுக்குருவிகள்.” இன்றைய இளம் குழந்தைகள் அந்தக் குருவிகளை பார்க்க முடியாமலேயே போன அவலத்தில் இருக்கிறார்கள். அருங்காட்சியகத்திலும், பறவைகள் சரணாலயங்களிலும் கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்ற அந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளை பார்க்கின்ற பொழுது நமது பழைய ஞாபகங்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்லும்.

அந்த அளவுக்கு சிட்டுக்குருவிகளுக்கும் நமக்குமான தொடர்பு நிறைய இருந்திருக்கும். ஆனால் இன்று மனிதனின் பேராசை, சுயநலம் காரணமாக அந்த சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. சாலைகளிலும் கடைகளிலும் வீடுகளிலும் வாசல்களிலும் சத்தம் போட்டு பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் இன்று ஏதோ மலைப்பகுதிகளில் ஏதோ அடர் காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்து கொண்டிருக்கின்றன‌. இப்படி சிட்டுக்குருவிகள் அழிந்து போனதற்கு, காணாமல் போனதற்கு காரணங்கள் நிறைய இருக்கின்றன.

ஓட்டு வீடுகள் மாறி கான்கிரீட் பில்டிங்குகளாக இன்று நமது வீடுகள் மாறிப்போனதும், தொழிற்சாலைகள்; வாகனங்கள் பல்கிப் பெருகி அவற்றால் வெளியிடப்படும் நச்சுப்பொகைகள் அதிகரித்ததும் , மரங்கள் வெட்டப்பட்டதும், மக்கள் தொகை பெருகியதும், தானியங்கள் எல்லாம் சிதறி கிடக்கின்ற கடைகளில் எல்லாம் இப்போது பாலிதீன் கவர்களில் பொருட்கள் மூடப்பட்டு கிடப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக நமது 11வது விரலாக 24 மணி நேரமும் நம்மோடு அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டிருக்கின்ற செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளிப்படுகின்ற கதிர்வீச்சுகளாலும் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் தன்னுடைய இறுதி மூச்சுகளை எல்லாம் சிட்டுக்குருவிகள் இன்று நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றைய நவீன உலகின் மாற்றங்களாலும் வளர்ச்சிகளாலும் தன் இனத்தின் வாழும் உரிமையை பறிகொடுத்து விட்டு எஞ்சி இருக்கின்ற உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று காடுகளுக்குள் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கின்ற சிட்டுக்குருவிகளையும் அதன் இனப்பெருக்கத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைய தினம் உலகம் முழுக்க சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் திரும்பிப் பார்த்தால் உலக வரலாற்றில் முழுக்க முழுக்க கம்யூனிசத்தை முன்னெடுத்து இன்று வரை அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற சீன தேசத்திற்கு கொஞ்சம் நாம் சென்று பார்க்க வேண்டும். 1950வது வருடம் “மாசே துங்” தலைமையிலான மாவோக்கள் சீனாவில் ஆட்சியைப் பிடித்த போது தங்களுடைய விவசாயத்தை காப்பதற்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்தத் திட்டத்தின் பெயர் “Forever best compaign”.

இதன்படி விவசாயத்தை அழிக்கும் நான்கு பூச்சிகளை அழிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு கட்டளை இடப்பட்டது. அந்த நான்கு உயிரினங்களில் பரிதாபத்திற்குரிய சிட்டுக்குருவியும் ஒன்று. இதனால் சிட்டுக்குருவிகள் சீனா முழுக்க அழிக்கப்பட்டது. அடைகாக்கப்பட்டு பொறிப்பதற்கு தயாராக இருந்த முட்டைகளும் உடைக்கப்பட்டன. கூடுகள் அழிக்கப்பட்டன. சிட்டுக் குருவிகள் மிகக் கொடூரமாக ஈவிரக்கமற்ற முறையில் அழிக்கப்பட்டன.

இனி எல்லாம் சுபிட்சமாக விவசாயம் பெருகும் என்று சீனாவில் நம்பப்பட்டது. ஆனால் சோதனை அதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது. சிட்டுக்குருவிகள் வெறும் புழு பூச்சிகளை மட்டும் உண்ணும் உயிரினம் அல்ல விவசாயத்திற்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கின்ற வெட்டுக்கிளிகளை வெட்டி சாய்கின்ற சிப்பாய்களாக சிட்டுக்குருவிகள் இருந்தன என்பது சீன அரசுக்கு அப்போது தெரியாமல் போய்விட்டது.

அதனால் சிட்டுக்குருவிகள் இல்லாததால் வெட்டுக்கிளிகளின் ஆதிக்கம் பெருக்கெடுத்தது வயல்களில் தனது படையெடுப்பை நடத்தி வெட்டுக்கிளிகள் துவம்சம் செய்தன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது, அதே நேரத்தில் மழையும் பொய்த்து போனது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டு வறுமை தலைவிரித்து ஆடியது. பஞ்சம் எங்கும் பறந்து விரிந்து காணப்பட்டது. இதனால் சீனாவில் அப்போது மடிந்தவர்கள் ஒன்றரை கோடி பேர் என்று சீன அரசு தெரிவித்தது.

ஆனால் உண்மை நிலவரம் அதிகமாக இருந்தது. “Tomb stone” என்ற பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த “யாங் ஜின்ஸெங்” என்ற பத்திரிக்கையாளர் கூற்றுப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் அப்போது மூன்று கோடியே 60 லட்சத்திற்கு மேல் என்பதாகும் . காலம் கடந்து விழித்துக் கொண்ட சீன அரசு அழிக்கப்பட வேண்டிய நான்கு உயிரினங்களிலிருந்து சிட்டுக்குருவியை விலக்கி விட்டது. பிறகு சிட்டுக்குருவியை வளர்ப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டது.

பின்னாளில் சீனா சிட்டுக்குருவிகளை வளர்த்ததன் காரணமாக விளைநிலங்களில் அமோக விளைச்சலை கண்டெடுத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சிட்டுக்குருவிகளின் பாதுகாவலன் என்று சொன்னால் நாசிக் நகரில் கல்லூரி பேராசிரியராக இருந்த முகமது திலாவரைத் தான் சொல்ல வேண்டும். “Nature forever society “என்ற அமைப்பை தொடங்கி சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும் என்று முழு முனைப்புடன் செயல்பட்டார். அவர் உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடங்களையும் உணவிடங்களையும் உருவாக்கி வைத்தார்.

அவரது வேண்டுகோளின் படி 2010 மார்ச் மாதம் 20ஆம் தேதி ஐநா சபை அன்றைய தினத்தை சிட்டுக்குருவிகள் தினமாக அறிவித்தது. 2012 ஆம் ஆண்டு டெல்லி மாநிலம்… டெல்லியின் மாநில பறவையாக சிட்டுக்குருவியை அறிவித்தது. உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டில் “Heroes of environment” என்று முகமது திலாவரை புகழ்ந்தது. உலகின் 30 சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவராக முகமது திலாவரை உலகம் கொண்டாடியது.

அவருடைய வேண்டுகோளின் படி இன்றைய தினம் மார்ச் 20 ஆம் தேதி ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட தினம் தான் “உலக சிட்டுக்குருவிகள் தினம்”. விவசாயிகளின் காவலனாக பயிர்களின் பாதுகாப்பாளராக அடுத்த தலைமுறைக்கு உன்னத தோழனாக மிக எளிய சின்னஞ் சிறு உயிராக உலா வந்து கொண்டிருக்கின்ற சிட்டுக்குருவிகள் இன்று அழியும் தருவாயில் இருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஆங்காங்கே அதற்கான வாழ்விடங்களையும் உணவு இடங்களையும் தண்ணீர் குவளைகளையும் வைப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

எனவே சிட்டுக்குருவிகளை வாழ வைப்பதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு நாம் அனுபவித்த பல நல்ல விஷயங்களை கடத்திச் செல்ல முடியும் என்ற வேண்டுகோளுடன் இன்றைய சிட்டுக்குருவி தினத்தை உலகம் முழுக்க சிறப்பாக கொண்டாடுவோம் என்று சூரியன் எஃப் எம் சூளுரை ஏற்கிறது.

Article By RJ K.S. Nadhan