Cinema News Specials Stories

“தோ பார்றா இது இன்னும் நிக்குது”

செல்வராகவனின் புதுப்பேட்டையில் `தோ பார்ரா இது இன்னும் நிக்குது’ என்று கூறி சுற்றியிருப்பவர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள். தனுஷ் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருப்பார். இந்த காட்சியை தனுஷின் ஆரம்பகால திரையுலக வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். அப்படி

அரும்பு மீசை; பென்சில் உடம்பு; அப்பாவி முகம்; இப்படியான உருவத்தோற்றம் கொண்ட ஒருவரை உலக சினிமாவே கொண்டாடப்போகிறது என்று யாராவது சொன்னால், `உளறாதீங்க சார்!’ என்று தான் பதில் வந்திருக்கும். ஆனால், அந்த இளைஞனிடத்தில் ஒல்லியான தேகம் மட்டுமல்ல. அடர்த்தியான ஒன்றும் இருந்தது. அது தான் அவருடைய உழைப்பு; சமரசமில்லாத உழைப்பு!

காதல் கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் இவனெல்லாம் ஹீரோவா?’ என கூறி சுற்றியிருக்கும் கூட்டமே சிரிக்கும்போது, விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாத அந்த வயதில் என்னவெல்லாம் யோசித்திருப்பார் தனுஷ்.சினிமாவே வேண்டாம்’ என்று கூட யோசித்திருக்கலாம். ஆனால், காலம் அவரை கைபிடித்து அழைத்து வந்து, ஹாலிவுட் வரை சேர்த்திருக்கிறது.

2002, மே 10 அன்று வெளியான துள்ளுவதோ இளமையில் பள்ளி மாணவனாக தனுஷ் அறிமுகமானது காலத்தின் கட்டாயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்தில் நடிக்க கஸ்தூரி ராஜாவும் செல்வராகவனும் பலரை அணுகியும் எதுவும் சரிவராமல் கடைசியில் அருகிலேயே இருந்த தனுஷை நடிக்க வைத்தார்கள். பிடிக்காமல் நடிக்க வந்தார் தனுஷ். ஆனால் அந்த எண்ணமே கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்தியது.

Dhanush

பெற்றோர், சமூகத்தைப் பிடிக்காமல் தன் போக்கில் வாழும் பள்ளி மாணவனாக வெளிப்படுத்திய நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தனுஷ் என்கிற நாயகன் உருவானான். துள்ளுவதோ இளமை படம் தனுஷைக் கதாநாயகன் ஆக்கியது, காதல் கொண்டேன் படம் அவரை நட்சத்திரமாக்கியது.

செல்வராகவன், வெற்றிமாறன் இந்த இருவர் தான் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். வெற்றி மாறனுடனான நட்பு பற்றி ஒரு விழாவில் பேசிய தனுஷ் இப்படிச் சொன்னார், ‘அது ஒரு கனா காலம்’ படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் அம்மாவை நினைத்து கனவில் இருந்து கண் விழித்துக் கதறி அழ வேண்டிய காட்சி. அப்போது எனக்கு 20 வயது.

Dhanush

பாலுமகேந்திரா சாரிடம், வெற்றியை(வெற்றி மாறன்) இந்தக் காட்சியை நடித்துக் காட்டச் சொல்லுங்கள். எப்படி செய்கிறார் என்று பார்த்துக்கொள்கிறேன் என்றேன். உதவி இயக்குநர்களை நடித்துக்காட்டச் சொன்னால் அதை அவர்கள் செய்வது எளிதாக இருக்காது. நான் விளையாட்டுக்காகத்தான் சொன்னேன். ஆனால் வெற்றி மாறன் அற்புதமாக நடித்து, பாலுமகேந்திரா சாரே போதும் என்று சொல்லும் அளவுக்கு நடித்தார். நான் வெற்றி மாறன் போல நடிக்காமல் வேறு மாதிரி நடித்தேன். காட்சி படமாக்கப்பட்ட பிறகு இதுகுறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்.

பாலுமகேந்திரா சார் என்னை அழைத்து, என்ன யோசிக்கிறாய் எனக் கேட்டார். சார், நான் செய்வது பிடித்திருந்ததா அல்லது வெற்றி செய்தது பிடித்திருந்ததா? அவரளவுக்கு நான் செய்தேனா என சந்தேகமாக உள்ளது என்று அவரிடம் கேட்டேன். அவர் சிரித்தார். என் மகன்களிடம் இருந்து ஒன்றைத் தேர்வு செய்ய சொல்கிறாயா என்று கேட்டார். இதற்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அன்று தன் பிள்ளைகளாக எங்களைப் பார்த்தார். அன்றிலிருந்து நானும் வெற்றி மாறனும் சகோதரர்களாகவே இருந்து வருகிறோம் என்றார். தனுஷின் பட வரிசையில் குறிப்பிட்ட காலம் ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ போன்ற ஒரு தலைக்காதலை புனிதப்படுத்தும் படங்களில் நடித்து சூப் பாய்ஸ்களுக்கான டானிக்காக இருந்தார். ‘மாரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ என கமர்ஷியலிலும், மறுபுறம் ‘புதுப்பேட்டை’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘மரியான்’, ‘அசுரன்’, ‘வட சென்னை’, ‘கர்ணன்’ என கன்டென்ட் உள்ள படங்களிலும், எளிய மக்களை பறைசாற்றும் விதமாகவே திரையில் தோன்றியிருக்கிறார் தனுஷ்.

குறிப்பாக அண்மையில் ‘படிப்பு தான் முக்கியம்’ என அசுரனில் அவர் குரல் ஒலிக்கும்போதும், ‘கர்ணன்’ படத்தில் உரிமைக்காக போராடும் கிராமத்து இளைஞராக வலம் வந்த போதும், திரையில் தனுஷ் நம்மை எந்த விதத்திலும் அந்நியப்படுத்தியதில்லை.

பைக் வாங்க போராடும் இளைஞனை ‘பொல்லாதவன்’ கனெக்ட் செய்தது போல, ‘வேலையில்லாத பட்டதாரி’ படம் வரும்போது இன்ஜினீயரிங் படிப்பு உச்சத்தில் இருந்தது. அந்த சமயத்தில் வேலை கிடைக்காமல் தவித்த இளைஞர்கள் தனுஷ் வடிவில் திரையில் தங்களையே பார்த்து ஆறுதலடைந்தனர்.

பெரும்பாலும் 90’ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை அதிக அளவில் பிரதிபலித்தவர் தனுஷ். இதனால் தான் தனுஷ் நடிப்பால் மட்டும் உயர்ந்த நடிகனல்ல என்பதை உறுதியாக சொல்லலாம். எளிய, நடுத்தர மக்களை பிரதிபலிக்கும் நாயகனாகவும், கூடவே அதில் வசிக்கும் இளைஞர்களின் அன்றாட வாழ்வை பேசியதாலும் , தனுஷின் வெற்றியை தங்களின் வெற்றியாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவர் தேசிய விருது பெறும்போது, பக்கத்துவீட்டு பையன் விருது பெறுவது போல கொண்டாடுகிறார்கள். நடிப்பின் அசுரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்கிறது சூரியன் பண்பலை.

Article By RJ Kannan