Cinema News Stories

மின்னலாய் வந்த இசை சூறாவளி!

சென்னையில் பிறந்த ஹாரிஸின் அப்பா எஸ்.எம்.ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் ஷியாமிடம் உதவியாளராக பணியாற்றிய அவர், தன் மகனை பெரும் பாடகரா பார்க்கணும் அப்படினு ஆசை பட்டாரு.

ஆனால், ஹாரிசுக்கு இசையமைப்பில் தான் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று ஹாரிஸ் நினைத்ததும் அதற்கு ஒரு காரணம். இளம் வயதிலேயே ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார்.

12-ம் வயதில் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார் ஹாரிஸ். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார். இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான ‘மின்னலே’ மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.

பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ரோஜா படம் முதல் மின்னலே வரை ஆர்.ரஹ்மான் வசம் இருந்த பிலிம்பேர் விருதுகளை தனது முதல் படத்திலேயே தன் வசம் திருப்பிய சாதனை ஹாரிஸ் உடையது.

பாடல்கள் மட்டும் இல்லாமல் பின்னணி இசையும் ஹாரிஸ்-இன் அடையாளம். மின்னலே, காக்க காக்க போன்ற படங்களின் பின்னணி இசை இதற்கு உதாரணம். ஹாரிஸ் இசை அமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். எங்கேயும் காதல் படத்தில் உள்ள குளு குளு வெண்பனி போல மற்றும் சிங்கம் படத்தில் உள்ள வை பை வை பை பாடலையும் எழுதியவர் இவர் தான்.

2009 ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவரது இசையால் கவனம் பெற்ற விளம்பர படங்கள் பல. அதன் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹாரிஸ் Come Back கொடுத்துள்ளார். இனி வரும் இவரது படங்கள் மற்றும் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

Article By RJ STEPHEN