Specials Stories

கிரிக்கெட் ரத்தத்தின் வழி வந்த ‘அஜய் ஜடேஜா’

கிரிக்கெட் தன் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது என அஜய் ஜடேஜாதான் கெத்தாக சொல்ல முடியும். இந்தியாவின் உள்ளூர் போட்டித்தொடர்களான ரஞ்சி டிராபி, துலீப் டிராபியின் பெயர் காரணத்துக்கும் ஜடேஜாவுக்கும் தொடர்பிருக்கிறது.

ஜடேஜாவின் தாத்தாவுடைய தம்பிதான் துலீப்சிங்ஜி. இவருடைய பெயரில்தான் துலீப் டிராபி போட்டிகள் நடத்தப்படுகிறது. துலீப்சிங்ஜியின் உறவினர்தான் ரஞ்சித்சிங்ஜி. ரஞ்சிங்ஜியின் பெயரில்தான் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. 90ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்மைலிங் ஸ்டார் அஜய் ஜடேஜா.

களத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் எப்பவும் முகத்தில் புன்னகையோடு விளையாடும் இவருக்கு இன்று வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
அஜய் ஜடேஜா ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். பல போட்டிகளில் பார்ட்னர்ஷிப்களை உடைக்க ஜடேஜாவின் பெளலிங்கைப் பயன்படுத்தியிருக்கிறார் கேப்டன் அசாருதின்.

கேஷுவலாக வந்து பந்துவீசி சில பல விக்கெட்டுகளை எடுத்துவிட்டுப் போவார் ஜடேஜா. தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் ஃபீல்டிங் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருபவர் ரவீந்திர ஜடேஜா, அதேபோல் 90களில் இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான ஃபீல்டர்களில் ஒருவர் அஜய் ஜடேஜா. பேட்டிங் பவுலிங் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் செம ஸ்மார்ட்.

இந்திய வீரர்களும் தரையில் விழுந்தெல்லாம் கேட்ச் பிடிப்பார்கள், பவுண்டரிகளைத் தடுப்பார்கள், ரன் எடுக்க விரட்டி விரட்டி ஓடுவார்கள் என்பதை உலகுக்குக் காட்டியவர் அஜய் ஜடேஜா. அசாருதின் போன்ற ஃபீல்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பேட்ஸ்மேனுக்கு கீழே விளையாடியதால் இவருக்கான இடம் அணிக்குள் நிரந்தரமாக இருந்தது.

அஜய் ஜடேஜா என்றதுமே பலருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 1996 காலிறுதிப் போட்டிதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்பாக ஜிம்பாப்வேயுடன் நடந்த கடைசி லீக் போட்டியில் இதே போன்ற ஒரு பவர்ப்ளே இன்னிங்ஸை ஆடியிருப்பார் ஜடேஜா.

அந்தப் போட்டியில் கிடைத்த நம்பிக்கையில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்து அப்படி ஒரு வெறித்தனமான ஆட்டமும் ஆடியிருப்பார். 90களில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற பல வெற்றிகளுக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அஜய் ஜடேஜா. இந்திய அணியில் விளையாடிய மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான அஜய் ஜடேஜாவின் பெயரும் புகழும் என்றும் வரலாற்றில் பதிந்திருக்கும்.

Article By RJ Kavin