Specials Stories

பெரும்பாலான இந்தியர்களை கிரிக்கெட் பக்கம் திசை திருப்பிய கபில் தேவ்!

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை விட, இந்திய ரசிகர்களின் முதன்மையான விளையாட்டாக, அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டாக இருப்பது கிரிக்கெட். 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிக்கெட் என்ற வார்த்தையை கூட பெரும்பான்மையானவர்கள் அதிகமாக உச்சரித்திருக்க மாட்டார்கள். எல்லா விளையாட்டுகளையும் போல கிரிக்கெட்டும் பத்தோடு பதினொன்றாக இருந்தது.

ஆனால் இன்று எல்லாமே தலை கீழ். கிரிக்கெட் என்பது ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் ஊறிப்போன அம்சமாக இருக்கின்ற அளவுக்கு மக்களிடமிருந்து பிரிக்க முடியாத பந்தத்தில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்ற கேள்வி எழும்பினால் ஒட்டுமொத்த விரல்களும் சுட்டிக்காட்டும் பெயர் “கபில்தேவ்”.

1959 இல் சண்டிகரில் பிறந்த கபில்தேவ் ஆரம்பகாலங்களில் உள்ளூர் விளையாட்டுகளில் சண்டிகர் அணிக்காக விளையாடினார். 76 -77 இல் நடந்த ஒரு போட்டியில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான விளையாட்டில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோன்று 9 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து எட்டு விக்கெட்டுகளை பெங்கால் அணிக்கு எதிராக எடுத்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இப்படி உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய கபில்தேவ், முதல் முதலாக 1978 அக்டோபர் மாதம் 16ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் மேட்ச் விளையாடினார். கபில்தேவ் சிறப்பாக விளையாடிய போதும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவு அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது “தில்லி பெரோசா கோட்டா” மைதானத்தில் தனது முதல் சதத்தை கபில்தேவ் அடித்தார்.

126 பந்துகளில் 124 ரன்கள் அடித்து சாதனை புரிந்தார். அதேபோன்று இங்கிலாந்து உடனான டெஸ்ட் மேட்ச்சில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இப்படி தனது தொடக்க கால சர்வதேச விளையாட்டுகளில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த கபில்தேவ் , இந்திய அணிக்கு தலைமை தாங்கியது 1983 ஆம் ஆண்டு.

அந்த வருடம் நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக இந்தியா 282 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 283 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணியை தனது கச்சிதமான பந்து வீச்சு மூலமும், தேர்ந்த தலைமையினாலும் 255 ரன்களுக்குள் சுருட்டி முதன் முதலாக இந்தியா உலகக் கோப்பையை வெல்லச் செய்தார்.

அந்த வெற்றிக்கு முழுமையான காரணமாக இருந்தது கபில்தேவின் தலைமை தான் என எல்லோரும் புகழ்ந்தார்கள். இந்தியாவின் கதாநாயகனாக பார்க்கப்பட்ட, போற்றப்பட்ட கபில்தேவ் முதன்முதலாக 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.

1999 முதல் 2000 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கபில்தேவ் இந்திய அணியின் அணித்தலைவர்களில் தலைசிறந்தவராக விளங்கினார் என்று விஸ்டன் பத்திரிகை 2002 இல் கபில் தேவ்-ஐ புகழ்ந்துள்ளது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட்டின் பக்கம் திருப்பிய பெரும் சாதனையாளரான கபில்தேவ் 34 முறை சர்வதேச விளையாட்டுகளில் தலைமை பொறுப்பை வகித்துள்ளார்.

இந்தியாவின் பெருமையை உலகுக்கு ஓங்கி ஒலித்த கபில்தேவ் எனும் ஒப்பற்ற சாதனையாளர் பிறந்த தினமான ஜனவரி 6 இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் சூரியன் FM பெருமை கொள்கிறது.

Article By RJ K S Nadhan