Specials Stories

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினங்கள் | பகுதி – 1

Endangered-Animals-Part-1

உலகத்தில் எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை ‘அரிய வகை உயிரினங்கள்’ என உலக நாடுகளும், சில அமைப்புகளும் இணைந்து வகைப்படுத்தி அவற்றை பாதுகாத்தும் வருகின்றன. அப்படியிருக்கும் அரிய வகை உயிரினங்களில் சில உயிரினங்கள் பற்றியும், அவற்றின் குணாதிசயங்கள் பற்றியும் இப்போது பார்ப்போம்.

  1. பாண்டா கரடி

பாண்டா என்றாலே நம் உடனடியாக நம் நினைவுக்கு வருவது kung fu panda தான். உலகளவில் சீனாவின் ஒரு முக்கியமான அடையாளம் இந்த ‘பாண்டாக்கள்’. சென்ற வருடத்திற்கு முன்பு வரை எண்ணிக்கையில் மிகவும் குறைந்து ‘அரிய வகை உயிரினங்கள்’ பட்டியலில் பாண்டாக்கள் இடம் பிடித்திருந்தன.

மூங்கில் மரங்கள் அழிப்பு பாண்டாக்கள் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு முக்கிய காரணம் என கண்டுபிடித்த சீன அரசு மூங்கில் மரங்கள் வளர்ப்பு, பாண்டாக்கள் பராமரிப்பு என தொடர்ச்சியாக செயல்படத் தொடங்கியது. ஏனெனில் பாண்டாக்களின் மிக முக்கியமான உணவே மூங்கில் தான்.

அதுமட்டுமில்லாமல் வருடா வருடம் மார்ச் முதல் மே வரை பாண்டாக்களுக்கு இனப்பெருக்க காலம். ஆனால் அப்பொழுதும் இந்த பாண்டாக்கள் சோம்பேறித்தனத்தால் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அதையும் சரிசெய்யத் தொடங்கினர்.

Video – Nat Geo Wild

பாண்டாக்களின் முக்கியமான வேலை நன்றாக சாப்பிடுவதும், தூங்குவதும். உலகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களால் அதிகம் ரசிக்கப்படும் உயிரினங்கள் பட்டியலில் முதல் 5 இடத்தில் பாண்டாவும் உள்ளது. இதற்கு காரணம் பாண்டாக்களின் cuteness தான். பாண்டா நடந்து வருவது, உருண்டு போவது, மரத்தில் ஏறி கீழே விழுவது என அவற்றின் ஒவ்வொரு அசைவையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.

பாண்டாக்கள் குறித்த இன்னொரு முக்கியமான விஷயம், இவை ஊனுண்ணி வகையை சேர்ந்தவை. இறைச்சி சாப்பிடக் கூடிய உயிரினமாக இருந்தாலும் பெரும்பாலும் மூங்கில், பழங்கள் என சைவத்தையே அதிகம் விரும்பி சாப்பிடும். ஒரு பெரிய பாண்டா 70 கிலோவில் இருந்து 130 கிலோ வரை இருக்கும். ஆனால் பாண்டா குட்டி பிறக்கும் போது வெறும் 400 கிராம் மட்டுமே இருக்கும். இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள்.

மேலும் ஒரு ஆச்சரியமான விஷயம், பாண்டாக்களுக்கு பிறக்கும் போது கண் தெரியாது. பார்வை வருவதற்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகும். அதுவரை தன் அம்மாவின் அரவணைப்பிலேயே வளரும். இப்படிப்பட்ட அழகான உயிரினமான பாண்டாக்களின் எண்ணிக்கை தற்போது 2000 வரை அதிகரித்துள்ளது.

சென்ற வருடமே சீன அரசாங்கம் அழியும் நிலையில் இருக்கும் விலங்குகள் பட்டியலில் இருந்து பாண்டாக்கள் பெயரை நீக்கி விட்டாலும், பாதிக்கப்படக் கூடிய உயிரினமாக பாண்டாக்களை வகைப்படுத்தியுள்ளனர்.

  1. பனிக்கரடி

Polar bear எனப்படும் பனிக்கரடிகள் உறை பிரதேசமான ஆர்க்டிக் கண்டங்களில் காணப்படும் அரிய வகை கரடியினம் ஆகும். ஊனுண்ணியான இவற்றின் பிரதான உணவு மீன்கள் மற்றும் சீல். நீரிலும் நிலத்திலும் வேட்டையாடும் திறன் கொண்டது இந்த பனிக்கரடிகள். ஆண் பனிக்கரடிகள் 400 முதல் 600 கிலோ எடையும், பெண் பனிக்கரடிகள் 200 முதல் 300 கிலோ எடையும் கொண்டிருக்கும். 25 முதல் 30 ஆண்டுகள் உயிர் வாழும்.

20,000-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் தற்போது இருப்பதாக இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் உலகின் தட்பவெட்ப நிலை மாறுபாடு, உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் பனிப்பாறைகள் உருகி வருவதன் விளைவாக 2100 ஆம் ஆண்டுக்குள் இந்த கரடியினம் முற்றிலும் அழிந்து விட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Video – Nat Geo Wild

தொடர்ந்து வேகமாக பனிப்பாறைகள் உருகுவதால் பனிப்பிரதேசங்களில் இருக்கும் பெரும்பான்மையான உயிரினங்கள் அழியும் நிலை உருவாகுமென்றும், இதையடுத்து பனிக்கரடிகள் உணவு தேடி அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இனப்பெருக்கம் செய்யாமல் எண்ணிக்கையில் குறைந்து 2100ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் அழிந்து விடுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கணித்துள்ளனர்.

இதையடுத்து அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பனிக்கரடிகளை எப்படி பாதுகாப்பது என வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  1. கோலா கரடி

பாண்டா கரடிகள் எப்படி சீனாவின் அடையாளமோ அதே போல கோலா கரடிகள் ஆஸ்திரேலியாவின் அடையாளம். கங்காருவை போல கோலா கரடிகளும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காண்டப்படும் அரிய வகை உயிரினமாகும். 4 முதல் 15 கிலோ எடையுடன் காணப்படும் இந்த கோலா கரடிகளின் ஆயுட்காலம் 18 ஆண்டுகள். இனப்பெருக்க காலம் வெறும் 36 நாட்கள் மட்டுமே. ஆனால் வருடத்திற்கு ஒரு குட்டி மட்டுமே போடுகிறது. கங்காருவை போல கோலா கரடிக்கும் தனது குட்டியை பாதுகாக்க வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு குட்டியை தனது வயிற்றுப்பகுதியில் வைத்துக் கொள்கின்றன தாய் கோலா கரடிகள்.

இவை பெரும்பாலும் மரங்களிலேயே வசிப்பதால் மரக்கரடிகள் என அழைக்கப்படுகின்றன. மிகவும் அரிதாக மட்டுமே மரத்தை விட்டு இறங்கும். அதுமட்டுமின்றி பொம்மை போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதால் பொம்மை கரடி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நாளில் 20 மணி நேரம் வரை தூங்கக் கூடியவை.

Video – Nat Geo Wild

கோலா கரடிகள் பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதில்லை. யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை இந்த கரடிகள் உட்கொள்வதால் அவற்றின் உடலுக்கு தேவையான தண்ணீர் பெரும்பாலும் இதிலிருந்தே கிடைத்து விடும். வெய்யில் காலங்களில் கிளையில் தொங்கியபடி ஓய்வெடுக்கும் இவை குளிர் காலங்களில் பந்து போல சுருண்டு உட்கார்ந்து கொள்ளும்.

2018ஆம் ஆண்டு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்த கோலா கரடிகளின் எண்ணிக்கை நகரமயமாதல், வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்ற காரணிகளால் தற்போது 55 முதல் 60 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் சாதுவான விலங்கான இவை மலைப்பாம்பு, கழுகு, ஆந்தை ஆகியவற்றால் வேட்டையாடப் படுகிறது. இதுவும் இவற்றின் அழிவுக்கு ஒரு காரணம்.

ஆஸ்திரேலிய அரசு கோலா கரடியை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தவும் பல கோடிகள் செலவிட்டு தனி சரணாலயங்கள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

  1. Sloth / அசையாக் கரடி

தமிழில் அசையாக் கரடி என அழைக்கப்படும் ஸ்லாத் உயிரினம் கரடி போன்ற தோற்றத்தில் காணப்பட்டாலும் இவை கரடியினம் அல்ல. Sloth bear என ஒரு வகை கரடியினம் உள்ளது. Sloth bear, Sloth இரண்டும் வேறு வேறு உயிரினங்களாகும்.

தற்போது நாம் பார்க்கக் கூடிய Sloth மிகவும் மெதுவாக நகரக் கூடிய உயிரினமாகும். இதன் காரணமாகவே இவை தமிழில் அசையாக் கரடி என அழைக்கப்படுகின்றன. ஆமைகளை விடவும் மெதுவாக நகரக் கூடியவை இவை. Zootopia அனிமேஷன் திரைப்படத்தில் கூட ஸ்லாத்துகள் இடம்பெற்றிருக்கும். மிக மிக மெதுவாக ஒவ்வொரு செயலையும் செய்யும்.

ஸ்லாத்துகள் பெரும்பாலும் மத்திய மற்றும் தென் அமெரிக்க மழைக் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. பெரும்பாலும் மரங்களிலேயே வசிக்கும் இவை கழிவுகளை வெளியேற்றுவதற்கு மட்டும் கீழிறங்கி வருகின்றன. மிகவும் மெதுவாக மரங்களில் நகர மட்டுமே செய்யும், மற்றொரு கிளைக்கோ மரத்திற்கோ இதனால் தாவ முடியாது. இவற்றின் அதிகபட்ச வேகம் 0.27 km/h ஆகும்.

Video – Nat Geo Wild

இவை செக்ரோபியா எனும் குறிப்பிட்ட மரத்தின் இலைகளை உண்கின்றன. பூச்சி, பல்லிகள் முதலியவற்றையும் உண்ணக் கூடியது. மிக மெதுவாக இயங்கக் கூடிய உடலமைப்பை கொண்டுள்ளதால் இவை உணவை செரிக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. சில சமயம் மாதக் கணக்கில் கூட ஆகலாம் என கூறப்படுகிறது.

ஸ்லாத்துகள் விரல்களின் எண்ணிக்கையில் 2 குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை 6 இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 3 விரல்கள் கொண்டது ஒரு வகை குடும்பம், 2 விரல்கள் கொண்டது மற்றொரு வகை குடும்பம். 3 விரல்கள் கொண்ட ஸ்லாத்துகளை விட 2 விரல்கள் கொண்ட ஸ்லாத்துகள் உருவத்தில் பெரியதும் வேகமாக நகரக் கூடியதுமாகும்.

நகரமயமாதல், காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆயிரக் கணக்கில் மட்டுமே ஸ்லாத்துகள் இருப்பது கண்டறியப்பட்டு இந்த உயிரினத்தை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அழிவின் விளிம்பில் இருக்கும் மேலும் 4 உயிரினங்கள் குறித்து அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.

Article By MaNo