வாழ்க்கையில் இக்கட்டான சூழலில், மீள முடியாத ஒரு தருணத்தில், முட்டுக்கட்டைகள் எங்கும் தடை போட, மூலையில் முடங்கிப் போய் இனி தப்பிக்க முடியாது என்று மூளையும் மனதும் ஸ்தம்பிக்கும் நேரத்தில் எடுக்கப்படுகின்ற ஒரு கோழைத்தனமான சோகமான முடிவு தான் தற்கொலைகள்.
இப்படி சுய கொலைகளுக்கு விளக்கம் கொடுத்தாலும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது; எதிர்பாராமல் நடக்கின்ற இழப்புகளின் போது; காதலின் தோல்விகளின் போது; கடன் தரும் நெருக்கடிகளின் இறுக்குதலின் போது; தாங்க முடியாத உறவுகளின் பிரிவுகளின் போது; பொறுக்க முடியாத உடல் உபாதைகளின் போது ; சுய கவுரவங்கள் பாதிக்கப்படுகின்ற பொழுது; கழிவிரக்கங்கள் மேம்படுகின்ற பொழுது; தோல்விகளை எதிர்கொள்ள தைரியமற்று போகும் போது; துரோகங்களால் ஏமாற்றப்படட்டோம் என்று நினைக்கின்ற பொழுது என எத்தனையோ விஷயங்கள் தான் தற்கொலைகளுக்கான எண்ணங்களை உருவாக்குகின்றன.
உலக அளவில் வருடத்திற்கு 7 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரம் ஒன்று சொல்லுகிறது. அவர்கள் அத்தனை பேரும் வாழ வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தினம் தினம் வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்க வேண்டும் என்றுதான் நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு அழுத்தங்களாலும் நெருக்கடிகளாலும் இந்த துயர முடிவை நீண்ட யோசனைக்கு பிறகு மிக தைரியமாக எடுத்திருப்பார்கள்.
அவர்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு அப்போது எந்த காதுகளும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருடைய இதழ்களும், இறுகப்பற்றி நம்பிக்கையூட்ட எந்த கரங்களும் இல்லாமல் போனதே அவர்களின் இந்த துயர முடிவுக்கு விரைவாக செல்வதற்கு வழி வகுத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். தோற்றுவிட்டோம் என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்று தீவிரமான கழிவிரக்கங்களாலும்; மன அழுத்தங்களாலும் இருக்கும் சக மனிதனுக்கு சாய்ந்து கொள்ள தோள்களையும், அவர்களின் காயங்களை ஆற்றுகின்ற மருந்துகளாக வார்த்தைகளையும், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கையயும் கொடுத்தாலே நம்மை சுற்றி நடக்கும் பெரும்பான்மையான தற்கொலைகளை தடுக்கலாம்.
மனம் விட்டு பேசுவதும் சவால்களை எதிர்கொள்ளலாம் என்ற தைரியமும் எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையையும் தான் நம்மை நம்பிக்கையோடு வாழ வைக்கும். பாரா ஒலிம்பிக் போட்டிகளை காணுகின்ற பொழுதுதான் புரியும் நமது பிரச்சனைகள் ஒன்றும் இல்லை என்பதும், வாழ்க்கையில் எதை இழந்தாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கும். இதையெல்லாம் ஏன் இன்று சொல்லுகின்றோம் என்றால், செப்டம்பர் 10 இன்றைய தினம் சர்வதேச தற்கொலைகள் தடுப்பு தினம்.
20 ஆண்டுகளுக்கு முன்னால் 2003 இல் IASP என்று அழைக்கப்படுகின்ற இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் சூசைட் பிரிவென்ஷன் என்ற அமைப்பு உலக சுகாதார அமைப்பு மற்றும் மனநலத்திற்கான உலக கூட்டமைப்புடன் இணைந்து தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்துடன் வருடம் தோறும் செப்டம்பர் 10ஆம் தேதி இதை செயல்படுத்தி வருகிறது.
“சாவிகள் இல்லாத பூட்டுகளும் இல்லை. தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளும் இல்லை “என்பதை நினைவில் கொண்டு வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம். தடைகளை தைரியமாக கடந்து செல்வோம் என்று இன்றைய தினத்தில் நாம் உறுதிமொழி கொள்வோம்.