Specials Stories

மணிப்பூரில் என்ன நடக்கிறது தெரியுமா? சொந்த மண்ணில் நம் வீட்டு பெண்கள் மீது நடத்தப்படும் அநீதி!

30,40 ஆண்கள் ஒன்று கூடி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை தீண்டியபடி வன்கொடுமை செய்து கொண்டே பொது இடத்தில் அழைத்து வருகின்றனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் நம் இந்திய நாட்டில் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குக்கி பழங்குடியின பெண்கள். அவர்களை அப்படி வன்கொடுமை செய்வதும் நம் இந்திய நாட்டை சேர்ந்த, அதே மணிப்பூர் மாநிலத்தில் வாழக்கூடிய மெய்தேயி சமூகத்தை சேர்ந்த மக்கள் என்கின்றனர். அதைவிட கொடுமை நாட்டை ஆளும் மத்திய அரசின் ஆட்சி தான் மணிப்பூரிலும் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு மேல் மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது.

மணிப்பூர் கலவரம் மெய்தேயி சமூகத்தினருக்கும், குக்கி சமூகத்தினருக்கும் இடையேயான வன்முறை என்கின்றனர். ஆனால் இது எப்படி தொடங்கியது என்று ஆராய்ந்தால், மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் அவர்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டுமெனவும், குக்கி மக்கள் பழங்குடியினர் என்பதால் இடஒதுக்கீடு அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது எனவும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தான் கலவரத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

Image

ஆனால் பாதிக்கப்பட்ட ஒருவர், மே மாதம் ஒரு நாள் நள்ளிரவில் குக்கி மக்கள் வாழும் மலைப்பகுதியிலிருந்து ஒரு குழு கீழிறங்கி வந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்து வரும் மெய்தேயி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று கூறியிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட குக்கி சமூக பெண்களின் தரப்பில் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், மே 3ஆம் தேதி சுமார் 1000 பேர் நவீன ஆயுதங்களுடன் தெளபால் மாவட்டத்தில் உள்ள அவர்களது கிராமத்தில் தாக்குதல் நடத்தி தீ வைத்து விட்டு கிராமத்தையே கொள்ளையடித்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்து ஆண்களுடன் காடுகளை நோக்கி ஓடியதாகவும் கூறியுள்ளனர்.

Image

இந்த பெண்களை காவல்துறை காப்பாற்றி அழைத்து செல்ல முயன்ற சமயத்தில், நவீன ஆயுதங்கள் ஏந்திய கும்பல் காவல்துறையையே தடுத்து பெண்களை அங்கிருந்து இழுத்து சென்றுள்ளனர். அதில் ஒரு பெண்ணுக்கு 19 வய்து மற்றொரு பெண்ணுக்கு 40 வயது. அவர்கள் தான் வீடியோவில் இடம்பெற்ற பெண்கள். இளம்பெண்ணின் தந்தை அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அப்போது காப்பாற்ற சென்ற இளம்பெண்ணின் சகோதரரையும் கொன்றுள்ளனர் கலவரத்தை நிகழ்த்தியவர்கள்.

குக்கி, மெய்தேயி இரு சமூகத்திலும் இப்படியாக மே 3 முதல் மே 6 வரை பாமர மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோயில்களும், தேவாலயங்களும் எரிக்கப்பட்டுள்ளன. பல பொதுஇடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பலர் புலம் பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 70 நாட்களாக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு தலையிட்டு கலவரங்களை நிறுத்தக்கோரி பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதுவும் நின்றபாடில்லை.

Image

நேற்று இந்த இரு பெண்களின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி, உலகளவில் வைரலானதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து பிரதமர் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தால், பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்துவரும் எங்களிடையே, இது போன்ற பகையுணர்வு எப்போதும் இருந்ததில்லை. இது போன்ற கலவரமும் எங்களுக்குள் ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை என்று கூறுகின்றனர். மேலும் நாங்கள் குரல் கொடுத்தும் 2 மாதங்களுக்கு மேல் மத்திய, மாநில அரசுகள் ஏன் கண்டுகொள்ளவில்லை? நாங்கள் இந்தியர்கள் இல்லையா? எனவும் கேள்வியெழுப்புகின்றனர்.

Image

பன்முக பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய ஒற்றுமை தான் இந்தியாவின் அடையாளம். அந்த அடையாளத்தை நாமே சிதைப்பது என்பது நம்மை நாமே அழித்துக் கொள்வது போன்றதே. அதே போல் பெண்கள் நாட்டின் கண்கள் என சொல்லும் நாட்டில், பெண்களை மிருகங்களை விட மோசமாக நடத்தும் ஆண்கள் இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நம் வீட்டுப் பெண்களை நாம் இப்படி நடத்துவோமா? நம் தாயை, உடன்பிறந்த பெண்களை, நம் பெண் பிள்ளையை இப்படி நடத்துவோமா?

இதனை செய்யும் ஆண்கள் இது குறித்து சிறிது யோசித்திருந்தால் இப்படி நடப்பார்களா? இந்த அளவுக்கு வெறி பிடித்தவர்களாக ஏன் சக மனிதர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். எதுவாக இருந்தாலும் இறுதியில் பாதிக்கப்படுவது திரும்ப கேள்வி கேட்க முடியாத சாமானிய மக்கள் தான்.

Image

தற்போதைய கலவரம் ஏன் நிகழ்ந்தது? எதனால் ஒன்றுபட்டிருந்த இரு சமூகங்கள் இடையேயான ஒற்றுமை இன்று முழுவதுமாக குலைக்கப்பட்டிருக்கிறது? இப்படியான பல கேள்விகள் சமூகவலைதளங்களில் உலகெங்கும் இருந்து இந்தியாவை நோக்கி எழுப்பப்பட்டு வருகின்றன. வருங்காலம் இதையெல்லாம் மாற்றி வேற்றுமையிலும் ஒற்றுமை மிக்க மனிதர்கள் நேசிக்கக் கூடிய இந்தியாவை உருவாக்கட்டும்

Article By MaNo