இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் அசுரன்.
இந்த திரைப்படம் வெளிவந்து இன்றோடு 4 வருடங்கள் ஆகிறது. இதனை வெற்றிமாறன் எழுதி இயக்க தனுஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் முதன்முறையாக தமிழில் நடித்த திரைப்படம். GV பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கதையில்… அதுவும் தன் நிஜ வயதைவிட 20-25 வயது அதிகமுள்ள கதாபாத்திரத்தில் நடித்தற்காகவே தனுஷைப் பாராட்ட வேண்டும். அதுவரை இளைஞராக மட்டுமே பார்த்துப் பழகிய தனுஷ், தலை நரைத்த… வேட்டி சட்டையும் துண்டும் அணிந்த… பருவ வயது மகன்களின் தந்தையான 45 வயதுக்கார சிவசாமியாகவே கச்சிதமாக உருமாறியிருந்தார்.
உடல்மொழி, குரல், முகபாவம் என அனைத்திலும் ஒரு கிராமத்து நடுத்தர வயதுக்காரரின் சாயலைக் கொண்டுவந்தார். நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் தகராறும், அது தொடர்பான கொலையும், பழிவாங்குதலும் தான் படத்தின் கதை என்றாலும் கூட, சமூகத்தில் நிலவி வரும் சாதிய அடக்குமுறைகளும், ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுமே படத்தின் அடிநாதம்.

ஆடுகளத்தில் மதுரைத் தமிழ், வடசென்னையில் சென்னைத்தமிழ், அசுரனில் நெல்லைத்தமிழ் என கதைக்களத்தின் மக்களைக் கண் முன் கொண்டு வந்துவிடுகிறார். ‘நிலத்தையும் பணத்தையும் வேண்டுமெனில் அவர்களால் பிடுங்கிக் கொள்ள முடியும். ஆனால் உன்னுடைய படிப்பை மட்டும் யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது’ என்ற வசனத்திற்கு எழுந்து நின்று கைதட்டும் ரசிகர்களைத் தமிழ்த் திரையுலகம் பெற்றுள்ளது என்பது சமூகத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதும் மிக பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தனுஷின் மனைவியாக மஞ்சு வாரியர், மச்சானாக பசுபதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடும் வழக்கறிஞராக பிரகாஷ் ராஜ், தனுஷின் மகன்களாக டீஜே அருணாச்சலம். கென் கருணாஸ், வடக்கூரானாக ‘ஆடுகளம்’ நரேன்’ என அனைவரும் 80-களின் தெற்கத்தி மனிதர்களாக வாழ்ந்து காட்டியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமியத்தன்மையில் தோய்ந்ததாகவும் மனதைத் தொடுவதாகவும் அமைந்திருந்தன என்றால்; பின்னணி இசை ருத்ரதாண்டவமாக அமைந்தது. குறிப்பாக ‘வா அசுரா வா’ எனும் தீம் இசை ரசிகர்களுக்கு உணர்வெழுச்சியை ஏற்படுத்தியது. வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஆர்.ராமரின் படத்தொகுப்பு, கலை இயக்கம் எனத் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களில் வழக்கமாக வெற்றிமாறன் படங்களில் தென்படும் நேர்த்தியும் தரமும் வெளிப்பட்டிருந்தன.
மிகப் பெரிய வணிக வெற்றி, விமர்சன ரீதியான பாராட்டு, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலைக் காத்திரமாகப் பதிவு செய்தது ஆகிய சிறப்புகளோடு வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற நாவல்கள்/சிறுகதைகளை வெற்றிகரமான சினிமாவாக மாற்றுவதற்கான சூத்திரத்தை ‘அசுரன்’ படத்தின் மூலம் உருவாக்கித் தந்திருக்கிறார் வெற்றிமாறன். தமிழ் சினிமா வரலாற்றிலும், மக்கள் மனதிலும் அசுரன் திரைப்படம் அழிக்க முடியாத இடம்பிடித்துவிட்டது என்பதே உண்மை.