சவால்களும், தீர்வுகளும், புதிய விழிப்புணர்வும்!
“அதிகரித்துவரும் மக்கள்தொகையால் ஏற்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.”
மக்கள்தொகை தொடர்பான கவலைகளைக் கையாள்வதற்கும், ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிப் பணியாற்றுவதற்கும் இந்தத் தினம் நம்மைத் தயார்படுத்துகிறது.
வரலாற்றுப் பின்னணி
மக்கள்தொகைப் பிரச்சினைகளின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டு, 1990-ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- 1987 ஜூலை 11: உலக மக்கள் தொகை 5 பில்லியனை (500 கோடி) எட்டியது.
- 1989: இந்த வரலாற்று நிகழ்வின் விழிப்புணர்வைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டக் குழு (UNDP) உலக மக்கள் தொகை தினத்தை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியது.
உலக மக்கள் தொகை வளர்ச்சி: ஓர் பார்வை
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இந்த புள்ளிவிவரப் பட்டியல் தெளிவாக விளக்குகிறது:
- 1950: 253 கோடி
- 2011: 700 கோடி
- தற்போது (2026): சுமார் 826 கோடி (8.26 பில்லியன்)
- 2030 (மதிப்பீடு): 850 கோடி
- 2050 (மதிப்பீடு): 970 கோடி
- 2100 (மதிப்பீடு): 1090 கோடி
முக்கியத் தகவல்: தற்போதைய உலக மக்கள் தொகையில் ஆசியக் கண்டத்தில் மட்டும் சுமார் 60% பேர் வசிக்கின்றனர்.
உலக மக்கள் தொகை தரவரிசை 2026 (முதல் 5 நாடுகள்)
தற்போது உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
| தரவரிசை | நாடு | மக்கள் தொகை (சுமார்) |
| 1 | இந்தியா | 147.6 கோடி |
| 2 | சீனா | 141.2 கோடி |
| 3 | அமெரிக்கா | 34.9 கோடி |
| 4 | இந்தோனேசியா | 28.7 கோடி |
| 5 | பாகிஸ்தான் | 25.9 கோடி |
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் நீடித்த சவால்கள்
மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் போது, ஒவ்வொரு நாடுகளிலும் தீவிரமான பொருளாதார நெருக்கடியும், கீழ்வரும் கட்டமைப்புப் பிரச்சினைகளும் உருவாகக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது:
- உணவு, குடிநீர் மற்றும் நிலப்பற்றாக்குறை.
- சுற்றுச்சூழல் மாசடைதல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள்.
- மக்களின் அடிப்படை வசதிகளில் தட்டுப்பாடு.
- வேலையின்மை மற்றும் போக்குவரத்து நெரிசல்.
- சமூகச் சீர்கேடுகள் மற்றும் இடப்பற்றாக்குறை.
2026 உலக மக்கள் தொகை தினத்தின் மையக்கருத்து (Theme)
இந்த ஆண்டிற்கான (2026 ஜூலை 11) மையக்கருத்து:
“இன்றைக்கு மற்றும் எதிர்காலத்திற்காக இளைஞர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நனவாக்குவது“ (Realizing the hopes and aspirations of youth for today and the future).
இளைஞர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் எதிர்காலம் பற்றிய ஆசைகளை மையமாகக் கொண்டு, உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் நிலைத்தன்மையை முன்னிலைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
நாம் எடுக்க வேண்டிய கூட்டு உறுதிமொழி!
மக்கள்தொகை பெருக்கத்தைச் சமநிலைப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும்.
- பாலின சமத்துவம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு குறித்து மக்களிடையே முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
- பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற செயல்பாடுகளில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
அப்போதுதான் நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும் என்பதை இந்த உலக மக்கள் தொகை தினத்தில் உணர்வோம். சவால்களை எதிர்கொண்டு, நல்ல மாற்றங்களை உருவாக்கி, அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உரித்தாக்குவோம்!
Article By – “சூரியோதயம்” N. செல்வராஜ்.

