Vadivelu: வடிவேலுவைப் பற்றி எழுதலாம் என்று உட்கார்ந்ததும் முதலில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ஏன்னா, அவரைப் பற்றி புதுசா என்ன சொல்ல முடியும் என்று நினைத்தால், அவரைப் பற்றி நமக்குத் தெரிந்த விஷயங்களே நிறைய இருக்கிறது.ஆனா கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது.நமக்கு வடிவேலுவைப் பற்றி தெரியும். ஆனால் வடிவேலு என்ற மனிதரைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?அதுதான் இந்தக் கட்டுரையை எழுதணும் என்று தோண வைத்தது.
சின்ன வயசுல TV-ல வடிவேலு காமெடி வந்தாலே போதும். அடுத்த அரை மணி நேரம் வீட்டுல சிரிப்பு தான். அப்போ அவருடைய background என்ன, அவர் எப்படி சினிமாவுக்கு வந்தார், அவருக்கு என்னென்ன திறமைகள் இருக்கிறது என்று யாரும் யோசிக்கவில்லை.வடிவேலு வந்தார்,சிரிக்க வைத்தார்,போய்விட்டார்.ஆனா இத்தனை வருடங்கள் கழிச்சு திரும்பிப் பார்த்தால், அந்த மனிதர் சினிமாவுக்கு வந்த பாதை ரொம்ப சுவாரஸ்யமானது.வடிவேலு முதலில் சினிமா நடிகர் கிடையாது. கண்ணாடி வெட்டும் தொழிலில் இருந்தவர். அவருடைய குடும்பத்துக்கும் அந்தத் தொழிலுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நாடகங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.இந்த விஷயம் எனக்கு ரொம்ப interesting-ஆ இருந்தது.ஏன்னா, இன்று வடிவேலுவின் முகத்தைப் பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும். அந்த முகபாவனை அவருடைய மிகப்பெரிய அடையாளம். ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் அவர் கண்ணாடி வேலை செய்திருக்கிறார்.கண்ணாடியில் நம்ம முகத்தைப் பார்க்கிறோம்.அந்தக் கண்ணாடி வேலை செய்த ஒருத்தருடைய முகம், பின்னாளில் கோடிக்கணக்கான மக்களின் நினைவில் பதிந்துவிட்டது.வாழ்க்கையே சில நேரம் இப்படித்தான் இருக்கிறது.நாம் ஒரு விஷயத்தைச் செய்துகொண்டிருப்போம். அது நம்மை எங்கே கொண்டு போகும் என்று நமக்கே தெரியாது,வடிவேலுவுக்கும் அப்படித்தான்.
சினிமாவில் ஆரம்பத்திலேயே பெரிய கதாபாத்திரம் கிடைத்துவிடவில்லை. சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது நடிகர் ராஜ்கிரணை சந்தித்தது.அதுவும் ஒரு பெரிய office-ல நடந்த meeting கிடையாது.ரயிலில் நடந்த சந்திப்பு,ரயில் பயணத்தில் வடிவேலுவின் பேச்சும், அவருடைய இயல்பான நகைச்சுவையும் ராஜ்கிரணைக் கவர்ந்ததாக வடிவேலு பின்னர் நினைவுகூர்ந்திருக்கிறார். அதன்பிறகு ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதை படிக்கும்போது எனக்கு ஒரு விஷயம் தோணியது.சில பேருக்கு வாழ்க்கையில் opportunity கதவைத் தட்டும்,சில பேருக்கு phone call வரும்,வடிவேலுவுக்கு ஒரு ரயில் பெட்டிக்குள்ளேயே அந்த வாய்ப்பு வந்திருக்கிறது.அதன்பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவின் முக்கியமான comedy நடிகராக மாறினார்.ஆனா இங்கேதான் வடிவேலுவை நாம் இன்னொரு விதமாகப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அவர் வெறும் comedy actor இல்லை,தேவர் மகன்’ படத்தில் அவர் நடித்த இசக்கி கதாபாத்திரத்தைப் பார்த்தால் அது புரியும்.அந்தப் படத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன் மாதிரியான ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.அதிலும் சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி வடிவேலு பேசும்போது அவருக்குள் இருந்த அந்த நடிகனின் ஆர்வம் நமக்குத் தெரியும்.
சிவாஜி கணேசனின் இறப்புக் காட்சியில் அழ வேண்டும். அந்தக் காட்சியில் தன்னுடைய நடிப்பு நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார்.அதுவும் சாதாரண ஆசை கிடையாது.ஒரு வளர்ந்து வரும் நடிகன், நடிப்பில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறான்.அந்தப் பசி இருந்ததால்தான் பின்னாளில் வடிவேலு இவ்வளவு தூரம் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.இன்னொரு விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது.வடிவேலு பாடகரும் கூட.நாம் அவருடைய குரலைக் கேட்டாலே சிரிப்போம். ஆனால் அந்தக் குரலில் பாடல்களும் இருக்கின்றன.இளையராஜா இசையில் ‘எல்லாமே என் ராசாதான்’ படத்தில் ‘எட்டணா இருந்தா’ பாடலைப் பாடியிருக்கிறார். அதன்பிறகு பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார்.அதற்குப் பல வருடங்கள் கழித்து ‘மாமன்னன்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ராசா கண்ணு’ பாடலைப் பாடினார்.அந்தப் பாடலைக் கேட்டபோது எனக்கு ஒரு விஷயம் தோணியது.இவ்வளவு வருடங்களாக நம்மை சிரிக்க வைத்த குரல், ஒரு கட்டத்தில் நம்மை அமைதியாக கேட்க வைக்கிறது.அதுதான் ஒரு artist-க்கு இருக்கும் range.இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் ‘Friends’ படத்தின் நேசமணி.நேசமணி கதாபாத்திரத்தை எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தோடு வடிவேலுவின் சொந்த வாழ்க்கைக்கும் ஒரு சின்ன connection இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வடிவேலு contractor-ஆக வேலை பார்த்திருக்கிறார். தொழிலாளர்களை வைத்து வேலை செய்திருக்கிறார்.அதனால் ‘Contractor நேசமணி’ என்ற கதாபாத்திரம் அவருக்கு ரொம்பப் புதுசான உலகம் இல்லை.அவர் பார்த்த வாழ்க்கையின் சில பகுதிகளே அந்தக் கதாபாத்திரத்துக்குள் வந்திருக்கலாம்.இதனால்தான் வடிவேலுவின் comedy நமக்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று எனக்குத் தோணுகிறது.அவர் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைத்தான் நடித்தார்.பக்கத்து வீட்டுக்காரர்,டீக்கடையில் உட்கார்ந்திருப்பவர்,எதற்கெடுத்தாலும் அறிவுரை சொல்லும் ஒருவர்,எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரியும் மாதிரி பேசுபவர்,கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுப்பவர்,எப்போதும் பயந்துகொண்டிருப்பவர்,இப்படி நம்ம வாழ்க்கையில் பார்த்த மனிதர்களை அவர் திரையில் கொண்டு வந்தார்,அதனால்தான் அவருடைய காமெடி நமக்கு artificial-ஆ தெரியவில்லை,அவர் dialogue பேசும்போது மட்டும் நம்மை சிரிக்க வைக்கவில்லை,அவர் முகத்தைத் திருப்பும்போது கூட சிரிக்க வைத்தார்.சில நேரங்களில் அவர் எதுவுமே பேசாமல் நிற்பார்,அதுவே போதும்,அதுதான் வடிவேலுவின் பெரிய strength என்று நான் நினைக்கிறேன்.
ஒரு வசனத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதை விட, எப்போது சொல்ல வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.ஒரு வார்த்தைக்கு முன்னாடி அவர் கொடுக்கும் அந்தச் சின்ன pause கூட comedy ஆகிவிடும்.அதனால்தான் அவருடைய காட்சிகள் இன்றும் வேலை செய்கின்றன.இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?வடிவேலுவின் பல வசனங்களுக்கு அந்தப் படம் நினைவில் இருக்காது.ஆனா அந்த வசனம் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும் நமக்குத் தெரியும்.நண்பனிடம் பேசும்போது,Office-ல் யாராவது ஓவர் பண்ணும்போது,WhatsApp group-ல் reply பண்ணும்போது,Instagram comment போடும்போது,எங்க பார்த்தாலும் வடிவேலு இருக்கிறார்.2019-ல் நேசமணி கதாபாத்திரம் மீண்டும் social media-வில் வைரலானது இதற்கே ஒரு பெரிய உதாரணம்.ஒரு படத்தில் பல வருடங்களுக்கு முன்னால் வந்த ஒரு கதாபாத்திரம், பல வருடங்கள் கழித்து ஒரு meme ஆகி மீண்டும் கோடிக்கணக்கான மக்களிடம் போய்ச் சேர்ந்தது.அப்போதுதான் இன்னொரு விஷயம் புரிந்தது.வடிவேலுவை மக்கள் மறக்கவில்லை.
அவர் சினிமாவில் இல்லாத காலத்திலும் அவருடைய காமெடி இருந்துகொண்டே இருந்தது.அவருடைய முகம் meme-களில் இருந்தது.அவருடைய வசனங்கள் மக்களின் பேச்சில் இருந்தது.அவருடைய reaction-கள் social media-வில் இருந்தது.ஒரு நடிகர் திரையில் இல்லாமலேயே மக்களிடம் தொடர்ந்து இருந்தால், அதுதான் உண்மையான reach என்று நினைக்கிறேன்.பிறகு ‘மாமன்னன்’ வந்தபோது வடிவேலுவை நாம் இன்னொரு விதமாகப் பார்த்தோம்.பல வருடங்களாக சிரிக்க வைத்த முகத்துக்குள் இவ்வளவு வலியும் கோபமும் இருக்கிறதா என்று அந்தப் படம் நமக்குக் காட்டியது.அவரைப் பார்த்து சிரித்த அதே மக்கள், அந்தப் படத்தில் அவரைப் பார்த்து அமைதியாக இருந்தார்கள்.அது அவருடைய நடிப்புக்குக் கிடைத்த இன்னொரு பெரிய அங்கீகாரம்.வடிவேலுவைப் பற்றி இவ்வளவு யோசித்த பிறகு எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான் தோணுது.சில நடிகர்களை நாம் திரையில் ரசிப்போம்..!சில நடிகர்களின் படங்களை நாம் மறக்க மாட்டோம்..!ஆனால் சில நடிகர்கள் மட்டும் நம்முடைய வாழ்க்கைக்குள்ளேயே வந்துவிடுவார்கள்.வடிவேலு அந்த மாதிரி ஒருத்தர்.
நம்ம வீட்டில் யாராவது ஏதாவது சொன்னால் ஒரு வடிவேலு வசனம் ஞாபகம் வரும்.நண்பன் ஏதாவது comedy பண்ணினால் ஒரு வடிவேலு reaction ஞாபகம் வரும்.யாராவது ஓவர் பண்ணினால் அவர் முகம் ஞாபகம் வரும்.சில நேரம் நம்முடைய நிலைமைக்கே வடிவேலு காட்சிதான் சரியாக இருக்கும்.அதுதான் அவருடைய மிகப்பெரிய வெற்றி.அவர் நம்மை சிரிக்க வைத்தார் என்பதைக் காட்டிலும்…நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்கு சிரிக்க ஒரு மொழியையே உருவாக்கிக் கொடுத்தார்.கண்ணாடி வெட்டும் தொழிலில் இருந்த ஒரு மனிதர்…நாடக மேடையில் நடித்தார்.சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தொடங்கினார்.பெரிய நடிகர்களுடன் நடித்தார்,பாடகரானார்,கதாநாயகனானார்,விருதுகள் வாங்கினார்,சினிமாவிலிருந்து ஒரு காலத்தில் விலகினார்,மீண்டும் வந்தார்,ஆனால் இவ்வளவு விஷயங்களைத் தாண்டியும் அவரை இன்னும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.அதற்குக் காரணம் அவருடைய படங்களின் எண்ணிக்கை இல்லை.அவருடைய வசனங்களின் எண்ணிக்கையும் இல்லை.அவர் நம்முடைய வாழ்க்கையை எவ்வளவு உண்மையாகப் பார்த்தார் என்பதுதான்.அதனால்தான் வடிவேலுவை பார்க்கும்போது நமக்கு ஒரு நடிகர் தெரியவில்லை.
நம்மைச் சுற்றி இருக்கும் யாரோ ஒருத்தர் தெரிகிறார்.சில நேரம் நம்முடைய நண்பன்,சில நேரம் நம்முடைய உறவினர்,சில நேரம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர்,சில நேரம்…நாமே கூட…!அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆனாலும் வடிவேலுவுக்கு வயதாகவில்லை,படங்கள் பழையதாகலாம்,Comedy track பழையதாகலாம்,Technology மாறலாம்,Meme format மாறலாம்,ஆனால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அந்தச் சின்னச் சின்ன முட்டாள்தனங்கள் மாறாத வரை…வடிவேலுவும் நம்மை விட்டு போக மாட்டார்,அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை,நம்முடைய வாழ்க்கையில் ஏற்கனவே கலந்து போயிருக்கும் ஒரு மனிதர்…!
Article by – RJ Kesav

