Cinema News Specials Stories

இணையத்தை கலக்கும் கபாலி !!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த வெற்றித் திரைப்படம் கபாலி. இப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி சூப்பர் ஸ்டாருக்கு மாபெரும் வெற்றிப் படமாய் அமைந்தது.

இப்படத்தில் ராதிகா ஆப்தே, சாய் தன்ஷிகா, கிஷோர், தினேஷ், கலையரசன், ஜான் விஜய், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். அவர்களுடன் நாசர், ரித்விகா, சங்கிலி முருகன், மைம் கோபி, லிஜேஷ், விஸ்வந்த் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். மலேசியாவில் உரிமைக்காக குரல் கொடுக்கும் டானாக இப்படத்தில் ரஜினியின் கபாலி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மலேசியாவில் குற்றங்களைப் புரியும் கேங்ஸ்டர் ஆன டோனி லீயின் ஆட்டத்தை கபாலி எப்படி அடக்குகிறார் என்பதே படத்தின் கதை சுருக்கம். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை தியேட்டரில் படம் பார்த்த தலைவர் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைந்தது. மேலும் அவர் இசையில் அமைந்த அனைத்து பாடல்களுமே 2014 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.

குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் அறிமுக காட்சியில் சிறையிலிருந்து விடுதலை அடைந்து வெளிவருவது போல அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு ஏற்ப மாஸ் ஆன பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கொடுத்திருப்பார். அதுமட்டுமின்றி இப்படத்தில் அமைந்த நெருப்புடா பாடல் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் கெத்தான பாடலாக அமைந்தது.

இப்படம் பெரும்பாலும் மலேசியாவில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்ய பிரவீன் எடிட்டிங் செய்தார். இப்படம் உலக அளவில் வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்னரே மலேசியாவில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் கபாலி திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. அதுமட்டுமின்றி ஜூலை 29, 2016 ஆம் தேதி இப்படம் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு மலேசியாவில் வெளியிடப்பட்டது.

கபாலி திரைப்படத்தின் டீசர் வெளியான மூன்றே நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து யூடியுபில் புதிய சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி அந்த தருணத்தில் அதிக பேர் பார்த்த இந்திய படத்தின் டீசர் எனும் பெருமையையும் பெற்றது.

மலாயில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸில் கபாலி போலீஸிடம் இறுதியில் சரணடைந்த படி கூறப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வெளியான அனைத்து நாடுகளிலுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டி சூப்பர் ஸ்டாரின் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இணைந்தது.

இத்திரைப்படத்தின் வெற்றியை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #4YrsOfindustryHitKabali #Thalaivar #Kabali என இணையத்தில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்…

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.