மனிதர்களில் ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைவரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 15 ஐ முன்னிலைபடுத்தி ஜாதிய பிரிவினையை கலைந்தெறியும் அடிப்படையில் உருவாகியுள்ள படம் article 15 , தமிழில் நெஞ்சுக்கு நீதி . சமூக நீதியும் , சமத்துவமும் வேண்டும் என வகுப்பெடுத்த படம் .
பொதுவா வேறு ஒரு மொழியில் வந்த திரைப்படத்தை நம்ம மொழில Remake பன்னும்போது அதோட original நம்ம கண் முன் வந்துப்போகும் ஆனால் இது எதுக்குமே இடம் கொடுக்காமல் நெஞ்சுக்கு நீதியை இயக்கியிருப்பார் இயக்குனர் அருண்ராஜா காமராஜா அவர்கள்.
2019 ஆம் ஆண்டு இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கிய ஆர்ட்டிக்கிள் 15, பெரும் அதிர்வலைகளை இந்தியா முழுக்க ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளை நுண்பகடி செய்து, சாதித் திமிரின் மீது பொளேரென அறைந்த ஒரு படம். அதை தமிழுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே மாற்றி, நம் மக்களுக்கு இன்னும் நெருக்கமான படமாக மாற்றி பிரமாதப்படுத்தியிருப்பார் இயக்குனர் அருண்ராஜா காமராஜா. எந்த இடத்திலும் ரீமேக் என்று நினைக்க முடியாத அளவுக்கு தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் உதயநிதி.
” நம்மள இங்க எரிக்கத்தான் விடுவாங்க, எரிய விட மாட்டாங்க “; ” சட்டம் தான் இங்க தேசிய மொழி ” ; ” அவங்க குளிச்சா அழுக்காகாத தண்ணி, நாங்க குடிச்சா அழுக்காகிடுமா சார்” போன்ற வசனங்கள் இந்த படத்திற்க்கு தனி பலம். பாலியல் அத்துமீறல் தொடர்பான படத்தில், அதற்கென எந்தக் காட்சியும் வைக்காமலே பார்வையாளர்களுக்கு அந்த வலியைக் கடத்திவிட முடியும் என நிரூபித்து இருக்கும் படக்குழு அதுதான் நீதியும் கூட. ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, மயில் சாமி என இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த படத்திற்கு பலம் .
வெளிநாட்டில் படித்து வளர்ந்தவரான ஹீரோவுக்கு சாதியத்தின் ஊற்று கண்ணான கிராமங்களும் அவை தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கும் அடுக்குகளும் ஆச்சரியம் தருகின்றன. சரியாக அதே சமயம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் காணாமல்போகிறார்கள். அதில் இரண்டு பேர் பிணமாய்க் கிடைக்க, மூன்றாவது பெண்ணின் நிலை கேள்விக்குறி.
சந்தேகக் கண்களோடு இந்த வழக்கை அணுகும் உதயநிதி அதைத் தன் பொறுப்பில் எடுத்து விசாரிக்க முயல, அவிழ்கிறது தீண்டாமையின் கோர முகம் என படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியம். மொத்தத்தில் இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்குறா? என கேட்கும் புரிதல் இல்லா கூட்டத்திற்கு சமூகத்தில் புரையோடி போயிருக்கும் தீண்டாமையின் அடிசுவடுகளை புரியவைத்து நியாயம் சேர்த்து இருக்கிறது அருண் ராஜாவின் நெஞ்சுக்கு நீதி.