Specials Stories

கிராமத்து திருவிழாக்கள்ல இவ்ளோ விஷயம் இருக்கா?

கிராமத்து திருவிழா அப்படின்னா புது டிரஸ், விளையாட்டு பொம்மைகள், நம்மளோட சொந்தங்கள் அந்த திருவிழால விக்கிற இனிப்பு, காரம் அப்படினு நெறய விஷயங்கள் இருக்கும். ஆனா அந்த திருவிழால நடக்குற முக்கியமான விஷேசத்துக்கு பின்னாடி என்னென்ன விஷயங்கள் இருக்கு… அது எதுக்காக பண்றாங்கனு பெருசா கவனிச்சதில்ல.

திருச்சி மாவட்டம் சூரியூரை அடுத்த லெட்சுமணன்பட்டி கிராமத்துல நடந்த திருவிழா நிகழ்வுகள கவனிச்சோம். அந்த திருவிழாவோட முதல் நிகழ்வான குதிரை எடுப்பு நிகழ்ச்சில இருக்க குதிரைய அங்குள்ள குயவர்களிடம் பிடி மண் கொடுத்து செய்வாங்க. இது அங்குள்ள சங்கிலி கருப்பு சாமிக்கு நேர்த்திக்கடனா கொடுக்கப்படுது.

இது ஊரின் நன்மைக்காகவும், ஊரின் விளைச்சலுக்காகவும் செய்றதா சொன்னாங்க. அடுத்தாக அன்று இரவு நடந்த முக்கிய நிகழ்வான எறிசோறு வழிபாடு. இது எப்படி சாத்தியமாகுதுனு தெரியல… ஆனா அன்னைக்கு நாங்க நேர்லயே இந்த விஷயத்த பார்த்தோம்.

இரவு 1.30 மணிபோல அந்த கோவிலோட மருளாளி என்று சொல்லபடுற பூசாரி கோவில் சார்பா வெண்பொங்கல் வச்சு அத எடுத்துட்டு ஊரு எல்லையில் இருக்கும் எல்லைமுனி சாமிய பாக்க கிளம்பினாங்க. கிளம்புறப்போ ஊருல உள்ள ஆண்கள் மற்றும் ” நல்லா ஓடக்கூடிய 2 பேர் வாங்கனு” தேவையான ஆட்களை கூட்டிக்கிட்டு எல்லாரும் கிளம்பி போனாங்க.

அங்கங்க வேக வேகமா ஓட ஆரம்பிச்சாங்க சுத்தி அவங்க கொண்டுவந்த தீப்பந்த வெளிச்சத்தை தவிர எந்த வெளிச்சமும் இல்ல, அங்க போனதும் பூசாரி மற்றும் கூட வந்த 3 பேர தவற மத்தவங்கள தூரத்துல நிக்க வச்சிட்டு அங்க நெறய விறகு அடுக்கி எரிய வச்சுட்டு இருந்தாங்க.

சில பூஜைகள் எல்லாம் முடிச்சுட்டு ஒரு கிடாவை அறுத்து அதோடு ரத்தத்த வெண்பொங்கலோட குழைச்சு வச்சாங்க. அடுத்து அந்த பூசாரிக்கு அருள்வந்து கொஞ்ச தூரம் போய் அந்த அந்த பொங்கல உருண்டை உருண்டையா உருட்டி மேல வீச… அந்த மேல வீசப்பட்ட உருண்டை மேலேயே காணாம போயிடுது. இத அந்த எல்லைமுனி எடுத்துக்குறதா சொல்றாங்க.

அவங்ககிட்ட இத பத்தி ஒருமுறை கேட்டப்ப இதேபோல எறிசோறு கடைசி உருண்டையா மேல குடுத்தப்ப அந்த சோறு பத்தாம அந்த பூசாரியையே மேல தூக்குனதாவும், அதுக்கு அவரு தன்னோட கையோட மேல் தோல அறுத்து அந்த இரத்தத்த கைல எடுத்து மேல்நோக்கி காட்டின பிறகுதான் என்னைய கீழ இறக்கி விட்டுச்சு அப்படின்னும் சொன்னாங்க.

இது உண்மையா இல்ல பொய்யானு யோச்சிக்கறதவிட கேக்குறப்போ சுவாரஸ்யமா இருந்துச்சு. அதேபோல இன்னொரு விஷயத்தையும் கவனிச்சேன். இந்த திருவிழா எப்போவும் அடுத்த அடுத்த இரவுதான் நடக்குது. பகல்ல எந்த விஷயமும் நடக்குறதில்ல.

அடுத்த நாள் நைட்டு ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் சின்னதா குடிசைக்கட்டி அதுல இளநீர், தென்னம் பாளை அப்பறம் தேங்காய், வாழைப்பழத்தோட பூஜை பொருட்களும் இருந்துச்சு. கோவில்ல இருந்து தேர் கிளம்பி போகும் போது ஒவ்வொரு வீட்டுலயும் நிறுத்துவாங்கலாம். நிறுத்தி ஓவ்வொரு வீட்டுலயும் கிடா வெட்டுவாங்கலாம்,

அதேபோல ஒரு வீட்டுலயும் அந்த ஆட்டுக்கிடா உடம்ப சிலுப்புனாதான் வெட்டுவாங்கலாம். அது உடம்ப சிலுப்பி வெட்டுற வரைக்கும் அந்த வீட்டுலேயேதான் தேர் நிக்குமாம். அப்பறம் அந்த குடிசை எதுக்குன்னு கேட்டப்போ, இது அந்த பச்சநாச்சி அம்மனுக்காகனு சொன்னாங்க.

அது மட்டுமில்லா நம்ம வீடு பெருசோ சிறுசோ அந்த அம்மனுக்கு முன்னாடி எல்லாரும் சமமா இருக்கணும் அப்படிங்குற விதியில எல்லாரும் வீடு முன்னாடி ஓலைக்குடிசை கட்டி வழிபடுவோம்னு சொன்னாங்க. ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு விதமா திருவிழா நடக்கும், அதுல இருக்குற சுவாரஸ்யங்கள நாம தெரிஞ்சுக்கனும்.

சும்மா திருவிழால கலந்துக்காம அந்த திருவிழால இதெல்லாம் எதுக்காக பண்றாங்க அப்படினு அங்குள்ள பெரியவங்கள கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.