World Social Media Day – ஒவ்வொரு காலகட்டத்திலும் தகவல்களையும் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல்வேறு விதமான உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. பண்டைய காலங்களில் புறாக்கள் மூலமும், தூதுவர்கள் மூலமும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செய்திகள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே தகவல்கள் உலகெங்கும் பரப்பப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய விஞ்ஞான யுகத்தின் மாபெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது “சோசியல் மீடியா” என்று அழைக்கப்படும் “சமூக ஊடகங்கள்”. உலகத்தின் அத்தனை செய்திகளையும் நமது உள்ளங்கைகளுக்குள்ளேயே, நேரடியாகப் பார்க்கின்ற அரிய வாய்ப்பை இது நமக்கு வழங்கியிருக்கிறது.
ஆளுமையும் ஆதிக்கமும்
இந்தச் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பல நேரங்களில் மனிதகுலத்திற்குப் பயனுள்ளதாகவும், சில நேரங்களில் எதிர்மறையாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொதுப் பிரச்சினையைத் திசைதிருப்புவதில் தொடங்கி, வல்லரசு நாடுகள் முதல் உள்ளூர் அரசுகள் வரை ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது வரை, சமூக ஊடகங்களின் தாக்கம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், “சமூக ஊடகங்களை வைத்துதான் இந்த உலகமே இயங்குகிறதோ?” என்று வியக்கும் அளவுக்கு, அதனுடைய பயன்பாடும் ஆளுமையும் அதிகரித்துள்ளன. அந்த அளவுக்குச் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் உலகை ஆட்டிப்படைக்கிறது.
தவிர்க்க முடியாத இரு பக்கங்கள்
அதே நேரத்தில், உலக மக்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் ஒருங்கிணைப்பதிலும், உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதிலும், சர்வதேச வணிகத்தை மேம்படுத்துவதிலும் சமூக ஊடகங்களின் பங்கு அளப்பரியது. இன்றைய அவசர உலகில் தவிர்க்க முடியாத, விலக்கி வைக்க முடியாத, அதே சமயம் தனிமனிதர்களால் விலகி இருக்கவும் முடியாத அளவுக்கு, ஒட்டுமொத்த மக்களையும் ஈர்த்து வைத்திருக்கும் ஒரு ‘காந்த சக்தியாக’ சமூக ஊடகங்கள் விளங்குகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஊடகங்களின் பங்கைக் கொண்டாடும் விதமாக, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30ஆம் தேதி “உலக சமூக ஊடக தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, சமூக ஊடகங்களுக்கும் நேர்மறை, எதிர்மறை என இரு பக்கங்கள் உண்டு. அதில் நாம் எதனைத் தேர்ந்தெடுக்கிறோம், எப்படித் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே சமூக ஊடகங்கள் நமக்கு வழிகாட்டியாக அமைகிறதா அல்லது நம்மைத் தவறான திசையில் அழைத்துச் செல்கிறதா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
நிறைவுரை
எனவே, சமூக ஊடகங்களை நமது சுய வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் நேர்வழியில் பயன்படுத்தினால், நிச்சயம் அதனால் நமக்குப் பயனும் மகிழ்ச்சியும் பெருகும் என்பதே நிதர்சனமான உண்மை.
Article by – K.S. நாதன்

